2,000 வரை UPI பரிவர்த்தனைக்குக் கட்டணமா? மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அசுர வேகத்தில் அதிகரித்து வரும் சூழலில், சாமானிய மக்கள் மற்றும் சிறு வணிகர்களுக்குப் பெரும் நிம்மதியளிக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ரூ.2,000 வரையிலான யுபிஐ (UPI) மற்றும் ரூபே டெபிட் கார்டு (RuPay Debit Card) மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு எவ்விதக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என வங்கிகளுக்கும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கும் அரசு கண்டிப்பான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

மத்திய நிதி அமைச்சகத்தின் இந்த தெளிவுபடுத்தலின்படி, ₹2,000 வரை செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளோ அல்லது கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற பணப் பரிவர்த்தனை சேவை நிறுவனங்களோ எந்தக் கட்டணத்தையும் நுகர்வோரிடமிருந்தோ வணிகர்களிடமிருந்தோ பெறக் கூடாது. அதேபோல, உள்நாட்டு ரூபே டெபிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் இந்த பூஜ்யக் கட்டண நடைமுறை முழுமையாகப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு மெர்ச்சண்ட் டிஸ்கவுண்ட் ரேட் (MDR) எனப்படும் கட்டணத்தைச் சிறிய அளவில் விதிப்பது குறித்துப் பல்வேறு தளங்களில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இது தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்கவில்லை என்பதையும் நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மேலும் வலுப்படுத்தவும், ரொக்கமில்லாப் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தவுமே இந்த முடிவு தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.