சென்னையில் நடைபெற்ற திராவிட இயக்கச் சிறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரபல மூத்த நடிகர் சத்யராஜ், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சமூக நீதி சாதனைகளைப் பாராட்டிப் பேசியதோடு, தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய்யை மறைமுகமாகத் தாக்கி அதிரடியாக உரையாற்றினார்.
தனது பேச்சில் விஜய்யின் அரசியல் நகர்வுகளைக் கடுமையாக விமர்சித்த சத்யராஜ், “இளைஞர்கள் மற்றும் ‘குட்டீஸ், நண்பா, நண்பீஸ்’ பேச்சைக் கேட்டு, மாற்றத்தைக் கொண்டுவருகிறோம் என்று சொல்லிப் பல குடும்பங்கள் இந்த தேர்தலில் அவசரப்பட்டு ஓட்டளித்து விட்டன. எனது உறவினர் ஒருவரின் 75 வயது தந்தை காலம் காலமாக இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு வந்தவர், தனது மகளின் பிடிவாதத்தால் இந்த முறை ‘விசில்’ சின்னத்திற்கு ஓட்டு போட்டுள்ளார். ஆனால், அடுத்த தேர்தல் வரும்போது மக்கள் அனைவரும் உண்மையை உணர்ந்து சரியான முடிவை எடுப்பார்கள்” என்று மறைமுகமாகக் கிண்டலடித்தார். மேலும், திமுக அரசு சார்பில் வழங்கப்பட்ட ஆட்டோக்களில் தற்பொழுது வேறு சில கட்சிகளின் கொடிகள் பறப்பதாகக் குறிப்பிட்ட அவர், “அந்தக் கொடிகள் இன்னும் எத்தனை நாட்களுக்குப் பறக்கிறது என்று நாமும் பார்ப்போம்” எனக் காட்டமாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து, சென்னை குதிரை பந்தய மைதானத்தை மாற்றி பிரம்மாண்ட செம்மொழி பூங்காவை உருவாக்கி வரும் அரசின் நடவடிக்கையைப் பாராட்டிய அவர், “நான் பெரியாரின் தீவிரத் தொண்டன். திமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்கட்சியாக இருந்தாலும் சரி, எப்போதும் அதற்குத் துணையாக உறுதியோடு நிற்பேன். ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒட்டிக்கொண்டு, எதிர்கட்சியாக மாறும்போது பயந்து ஓடும் ஆள் நான் அல்ல. என்னை திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘கட்டப்பா’வாகவே நீங்கள் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்” என உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியுள்ளார்.





