திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகே உள்ள கல்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் புதன்கிழமை வலுவான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஆயிரக்கணக்கான சர்வே கற்களுக்கு மதச்சாயம் பூசப்படும் அபாயம்
மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், உயர் நீதிமன்ற உத்தரவு அப்படியே தொடர்ந்தால் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான நில அளவீட்டுச் சர்வே கற்கள் மதச் சாயம் பூசப்படும் அபாயம் ஏற்படும் என வாதிட்டார். நீதிமன்றத்தின் அதிகார வரம்பை இதுபோன்ற விவகாரங்களில் விரிவுபடுத்தக் கூடாது என்றும், அந்தத் தூண் பாரம்பரியமான தீபத்தூண் அல்லாமல் நிலத்தை அளவிடும் எல்லைக் கல் மட்டுமே என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மறுபுறம், தர்கா கமிட்டி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உஜேஃபா அகமதி, உயர் நீதிமன்ற விதிகளைப் பின்பற்றி பதிலளிக்க உரிய அவகாசம் வழங்கப்படாமலேயே தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததாக வாதிட்டார். மேலும், தர்கா தரப்புக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நீதிபதி நேரில் ஆய்வு மேற்கொண்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
பாரம்பரியமும் நில உரிமையும்: HR&CE வாதங்கள்
வரும் நவம்பர் 24-ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ள நிலையில், அதற்குள் தடை விதிக்காவிட்டால் குறிப்பிட்ட அந்த ‘விவாதிக்கப்பட்ட’ இடத்தில் தீபம் ஏற்ற வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால் அவசரத் தற்காலிக நிவாரணம் கோரி அரசு தரப்பில் வாதிடப்பட்டது. முன்னதாக, திருப்பரங்குன்றம் மலையும் கோயில்களும் தொல்லியல் துறையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும், பாரம்பரியமான தீபக் கொண்டாட்டங்களை மாற்றியமைக்கக் கோருவதையும் இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) தரப்பு கடுமையாக எதிர்த்துள்ளது.
1923-ம் ஆண்டின் சிவில் நீதிமன்ற தீர்ப்பு மற்றும் 1931 பிரைவி கவுன்சில் உத்தரவின்படி மலையின் உரிமையும் வழிபாட்டு முறைகளும் பல தசாப்தங்களாகத் தீர்க்கப்பட்டுவிட்டதாக HR&CE கமிஷனர் டி.ஜி. விநாயகம் தனது பிரமாணப் பத்திரத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். உச்ச உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த பரபரப்பான வழகின் விசாரணை நாளையும் (வியாழக்கிழமை) தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.