இது சன் டிவியோ, விஜய் டிவியோ கிடையாது!” தவெக கூட்டணி விவகாரத்தில் திருமாவை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) இடம் பெற்றிருந்தாலும், தற்பொழுது வரை தவெக கூட்டணியில் விசிக அதிகாரப்பூர்வமாக இணையவில்லை என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தாலும் கூட, நாங்கள் தவெக கூட்டணியில் இணைந்துவிட்டோம் என்று சொல்வதற்கு அதிகாரப்பூர்வமான எந்தவொரு நிகழ்வும் தற்பொழுது வரை நடைபெறவில்லை என்ற கருத்தை அவர் முன்வைத்தார். மேலும், கடந்த ஜூலை 1-ஆம் தேதி கூட்டணி தொடர்பாகத்தான் முதலமைச்சர் விஜய் தங்களுக்கு ஆதரவு நல்கிய கட்சிகளோடு விரிவான பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வை நடத்தினார் என்றும், ஆனால் அந்த கூட்டத்தில் இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தவெக தலைமையில் இன்னும் ஒரு முறையான கூட்டணி அமையவில்லை என்பதே இதன் பொருள் என்றும் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

திருமாவளவனின் இந்த விளக்கத்திற்குத் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்பி மாணிக்கம் தாகூர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து நேரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். ஒரு கட்சியின் அமைச்சரவையில் நீங்கள் இடம் பெற்றுவிட்டாலே, அந்த ஆட்சியில் நீங்கள் ஒரு அங்கம் (Part) ஆகிவிட்டீர்கள் என்றும், அங்கு நீங்கள் கூட்டணியில் இருப்பதாகத்தான் கருத முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதில் எவ்வித குழப்பங்களுக்கும் இடம் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அரசியல் நிலைப்பாட்டில் வார்த்தை விளையாட்டு விளையாடுவது ஏற்புடையதல்ல என்றும் அவர் சாடினார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "அடுத்து தனுஷா?" - கோவையில் வெளியான துண்டுப் பிரசுரம்: அரசியல் களத்தில் அடுத்த புயல்!

மேலும், அரசியல் என்பது வார்த்தை விளையாட்டுகளைக் காட்டிப் போட்டியிடுவதற்கு இது சன் டிவியோ அல்லது விஜய் டிவியோ நடத்தும் தொலைக்காட்சிப் போட்டி விளையாட்டு கிடையாது என்று மாணிக்கம் தாகூர் மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு கட்சிக்கு, அதாவது ஒரு முதலமைச்சரின் தலைமையில் இருக்கக்கூடிய ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துச் சட்டமன்றத்தில் வாக்கு செலுத்தினாலே அங்கு அவர்கள் தங்களின் ஆதரவு நிலைக்கு வந்துவிட்டார்கள், தோழமை நிலைக்கு வந்துவிட்டார்கள் என்றுதான் அர்த்தம் என அவர் விவரித்தார். அமைச்சரவையில் பங்குகொண்டு அதிகாரத்தை அனுபவித்துக் கொண்டே, இன்னும் கூட்டணி அமையவில்லை என்று கூறுவது வெறும் அரசியல் நாடகம் என்றும் காங்கிரஸ் தரப்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.