அரசு மருத்துவமனை குழந்தைகளுக்குத் தங்க மோதிரம்! டெண்டர் வெளியிட்டது தமிழக அரசு!

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு, தனது தேர்தல் வாக்குறுதியான “தாய் மாமன் தங்க மோதிரம்” திட்டத்தை நிறைவேற்றும் வகையில் மிக முக்கியமான அடுத்த கட்டப் படியை எடுத்து வைத்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களின் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் இத்திட்டத்திற்காக, தற்போது தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) அதிகாரப்பூர்வ டெண்டரை வெளியிட்டுள்ளது.

மொத்தம் ரூ.755.83 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், 22 கேரட் (916 ஹால்மார்க்) தரமுடைய 4,41,667 தங்க மோதிரங்களைக் கொள்முதல் செய்ய இந்த ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. தகுதியுடைய நிறுவனங்கள் இன்று (ஜூலை 14, 2026) முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை இந்த டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், 2026 ஜூன் 22ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் பயனடைய உள்ளனர். பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர் விஜய் இத்திட்டத்தை முறைப்படி தொடங்கி வைக்கவுள்ளார். தமிழர் பாரம்பரியத்தின் ‘தாய்மாமன் சீர்’ மரபை பிரதிபலிக்கும் வகையில், அரசு மருத்துவமனைகளின் மீது மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.