தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) தனது அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களைக் கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் திருமதி K. மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். அதேபோல், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் திருமதி P. சத்தியபாமா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வேட்பாளர்கள் இருவருமே ஏற்கனவே அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர்கள் இருவரும், பின்னணியில் எழுந்த அரசியல் மாற்றங்கள் காரணமாகத் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.
அவர்கள் தங்களது பதவிகளைத் துறந்ததால் உருவான இந்த வெற்றிடங்களுக்கே தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக கொள்கைகளை ஏற்று இணைந்த மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவருக்குமே மீண்டும் போட்டியிட தவெக தலைமை வாய்ப்பளித்துள்ளது. வரும் அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





