தமிழக அரசியல் களத்தில், இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் தாராபுரம் தொகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு எழுச்சிமிக்க உரையாற்றினார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்த இந்த எழுச்சி கூட்டத்தில் பேசிய அவர், எதிர்க்கட்சியான திமுக, அதிமுக (‘மற்றும் பலர்’) கூட்டணி நகர்வுகளைக் கடுமையாக விமர்சித்துப் பிரசாரம் செய்தார்.
தனது உரையில் மன்னராட்சி மனப்பான்மை குறித்துப் பேசிய விஜய், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் தாங்கள்தான் இன்னும் அதிகாரத்தில் இருப்பதாக நினைக்கக்கூடிய மன்னராட்சி மனப்பான்மை நமக்குக் கிடையாது. ‘மக்களிடம் செல், மக்களுடன் வாழ்’ என்ற பேரறிஞர் அண்ணாவின் வழியைப் பின்பற்றித்தான் நாம் அரசியலுக்கு வந்திருக்கிறோம். ஆனால், அண்ணாவையும் அவர்தொடங்கிய கட்சியையும் மறந்துவிட்டு, தீயசக்தியான திமுகவுடன் மறைமுகமாகப் பினாமியாகக் கூட்டணி அமைத்துச் சுயநலமாகச் சுத்துபவர்கள் நாம் அல்ல. நாம் மக்களுக்காகவும், அவர்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காகவும் அரசியலுக்கு வந்திருக்கிறோம்” என்று பேசினார்.
தொடர்ந்து மதச்சார்பற்ற கொள்கை குறித்து விளக்கிய அவர், “அரசியலுக்கு வருவதற்கு முன்பே ‘எம்மதமும் சம்மதம், எம்மதமும் நம்மதம்’ என்று அறிவித்துவிட்டோம். எங்களது கொள்கை ‘மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கை’. கிருஷ்ண ஜெயந்தி, கிறிஸ்மஸ், பக்ரீத் என அனைத்துப் பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிப்போம்; எல்லாரும் நமக்கு ஒன்றுதான். திமுகவை போல வெளியில வேஷம் போட்டுக்கொண்டு வீட்டுக்குள்ள பம்மிப் பதுங்கும் பழக்கம் நமக்கு இல்லை” என்று குறிப்பிட்டார்.
திமுக தலைவர்களின் பேச்சுகளைச் சுட்டிக்காட்டி விமர்சித்த விஜய், “திமுக பொதுச்செயலாளர் அண்ணா காலத்திலும், எம்ஜிஆர் காலத்திலும் எளிய குடும்பத்து ஆட்கள் மன்னர்களை வீழ்த்தியதாகப் பேசினார். அதேபோலத்தான் இன்று நம்முடைய காலத்திலும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் களம் இறக்கி, இன்றிருக்கும் திமுக மன்னர்களையும்; குறுநில மன்னர்களையும் நமது தவெக தோற்கடித்து வரலாறு திரும்பியுள்ளது. மேலும் கொளத்தூர் மக்கள் தனக்கு ஓட்டு போடவில்லை என்பதை திமுக தலைவர் மேடையில் சிரித்துக்கொண்டே வெளிப்படுத்தியுள்ளார்; ஆட்சியில் செய்த தவறுகளால் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.
அதிமுக முன்னணி தலைவர்களை ‘மற்றும் பலர்’ எனக் குறிப்பிட்டுத் தாக்கிய விஜய், “எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் எதிர்த்து அரசியல் செய்த தீயசக்தி திமுகவுடன் இன்று இவர்கள் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கப் பார்ப்பது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்குச் செய்யும் துரோகம். இந்த துரோகத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தான், சட்டசபை உறுப்பினராக இருந்த நமது சகோதரி சத்தியபாமா அவர்கள் தனது எம்.எல்.ஏ பதவியை முறைப்படி ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். மக்கள் ஆதரவு முழுமையாக நம்ம பக்கம் இருக்கும்போது நமக்கு எந்தப் பேரமும் தேவையில்லை” என்று ஆவேசமாகப் பேசினார்.
இறுதியாகக் கொங்கு பகுதி மக்களிடம் வாக்கு சேகரித்த அவர், “அன்று நடந்தது அம்மா ஆட்சி, அடுத்து நடந்தது அப்பா ஆட்சி, இன்று நடப்பது பிள்ளைகளின் ஆட்சி, நமது வீட்டுப் பிள்ளைகளின் ஆட்சி. எனவே, பொய்யான வாக்குறுதிகளையும் சதி வேலைகளையும் நம்பாமல், தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் நமது சகோதரி சத்தியபாமாவுக்கு ‘விசில்’ சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்து உரையை நிறைவு செய்தார்.