சட்டப்பேரவையில் விஜய் செய்த அந்த சைகை! மிசா விவாதம் மீண்டும் சூடுபிடித்த பின்னணி என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மிசா (MISA) சட்டம் குறித்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியபோது அவர் செய்த ஒரு குறிப்பிட்ட கைச் சைகை தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அந்த சைகை இயல்பாகச் செய்யப்பட்ட கை அசைவா அல்லது அவசரநிலைக் காலத்தில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களை மறைமுகமாகச் சுட்டிக்காட்டும் அரசியல் குறியீடா என்ற விவாதம் தீவிரமடைந்துள்ளது.

1976-ம் ஆண்டு நாட்டில் அவசரநிலை அமுலில் இருந்தபோது, அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவின் பேரில் உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டத்தின் (மிசா) கீழ் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறைவாசத்தின் போது தாம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானதாக மு.க. ஸ்டாலின் தனது சுயசரிதையிலும் பல்வேறு மேடைகளிலும் பதிவு செய்துள்ளார்.

இந்த வரலாற்றுச் சம்பவத்துடன் சென்னை முன்னாள் மேயர் சி. சிட்டிபாபுவின் தியாகம் பிரிக்க முடியாத ஒன்றாகக் கருதப்படுகிறது. சிறையில் மு.க. ஸ்டாலின் மீது நடத்தப்பட்டத் தாக்குதல்களைத் தடுப்பதற்காகச் சிட்டிபாபு குறுக்கே விழுந்து தடுத்ததாகவும், இதனால் படுகாயமடைந்த அவர் பின்னாள்களில் உயிரிழந்தார் என்பதும் வரலாற்றுப் பதிவுகளாக உள்ளன.

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, திமுகவினர் தங்களது அரசியல் வரலாற்றில் மிசா சிறைவாசத்தை மீண்டும் மீண்டும் முன்னிலைப்படுத்துவதைக் கேலி செய்யும் நோக்கில் முதலமைச்சர் விஜய் அந்தச் சைகையைச் செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தச் சைகையின் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கத்தைக் குறித்து விஜய் தரப்பில் இருந்து நேரடி விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  விஜய்க்கு சபாநாயகர் அதிகாரம் தெரியல! காமராஜர், எம்ஜிஆரையே பார்த்தவங்க நாங்க: துரைமுருகன்!

எது எப்படி இருப்பினும், முதலமைச்சர் விஜய்யின் அந்த ஒரு குறிப்பிட்ட சைகை, பல தசாப்தங்களுக்கு முன் நடந்த மிசா விவகாரத்தை மீண்டும் மக்கள் மத்தியிலும் ஊடகங்களிலும் பெரும் அரசியல் விவாதமாக உருவெடுக்க வைத்துள்ளதை மறுக்க முடியாது.