தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் நகர்வுகள் தற்போது அதன் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், இன்று ஆளுநர் மாளிகையில் ஆளுநர் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோரினார்.
ஆளுநர் மாளிகையில் 40 நிமிட ஆலோசனை
நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட விஜய், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்தார். அவருடன் முக்கிய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பு, தவெக ஆட்சி அமைப்பதற்கான இறுதி கட்ட நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இது ஆளுநருடன் விஜய் நடத்தும் இரண்டாவது சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் அதிரடி அறைகூவல்
சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்கள் மற்றும் கட்சி வட்டாரங்களில் வெளியான தகவலின்படி, விஜய் மிகவும் நம்பிக்கையுடன் காணப்பட்டார். “நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்கத் தயாராக உள்ளேன். பொறுப்பேற்ற பிறகு சட்டப்பேரவையில் எனது பெரும்பான்மையை (Majority) நிரூபிக்கத் தயார்” என அவர் ஆளுநரிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அடுத்தகட்டத் திட்டம்: பனையூர் பயணம்
ஆளுநர் மாளிகையிலிருந்து புறப்பட்ட விஜய், நேரடியாகப் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்குச் சென்றார். அங்குத் தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். ஆளுநரின் அழைப்பு எப்போது வரும்? பதவியேற்பு விழா எப்போது? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழகமே பனையூரை நோக்கித் தனது பார்வையைத் திருப்பியுள்ளது.
திமுகவின் “இடையூறு செய்ய மாட்டோம்” என்ற நிலைப்பாடும், விஜய்யின் இந்தத் துணிச்சலான நகர்வும் தமிழக அரசியலில் ஒரு புதிய ஆட்சி மாற்றத்தை உறுதி செய்துள்ளன.





