நடந்து முடிந்த தேர்தலில் திமுக சந்தித்த பின்னடைவுக்கும் கூட்டணி உடைந்ததற்கும் திமுகவின் தவறான நிர்வாகமும், தவெகவை (தமிழக வெற்றி கழகம்) சரியாகக் கணிக்கத் தவறியதுமே முழு காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மிகக் காரசாரமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், திமுகவின் இறுக்கமான அணுகுமுறையாலேயே ஆண்டாண்டு காலமாக உடன் இருந்த தோழமைக் கட்சிகள் கூட்டணியை விட்டு வெளியேறும் சூழல் உருவானதாகப் போட்டுடைத்துள்ளார். திமுக எங்களை விட்டு விலகியதே தவிர, நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறவில்லை என்று கூறிய அவர், கிடையில் இருந்த ஆட்டைப் பாதுகாக்கும் ஆற்றல் கிடைக்காரனுக்கு இல்லையென்றால், கதவைத் திறந்துவிட்டு ஆடு போய்விட்டது என ஆட்டைப் பழிகூறுவதில் எந்தவித நியாயமும் இல்லை எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.
கூட்டணிக் கட்சிகளை திமுக கையாண்ட விதத்தில் மிகப்பெரிய தவறுகள் இருந்ததைச் சுட்டிக்காட்டிய திருமாவளவன், தொகுதி ஒதுக்கீட்டின் போது திமுக காட்டிய இறுக்கமான போக்கே விரிசலுக்குக் காரணம் என்றார். மதிமுக சொந்தச் சின்னத்தில் போட்டியிட ஆசைப்பட்ட போது அதை மறுத்தது, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலுக்கு ஏற்பட்ட கசப்பான சூழல்கள், மற்றும் நீண்டகால தோழமைக் கட்சியான ஐயூஎம்எல் கூட்டணியை விட்டு வெளியேறியது என அனைத்து நிகழ்வுகளுக்கும் திமுகவின் பிடிவாதமே காரணம் என்று சாடினார்.
பல ஆண்டுகளாகக் கூட்டணியில் உண்மையோடு இருந்த கட்சிகளை விட, கடைசி நேரத்தில் கூட்டணியில் இணைந்த தேமுதிகவிற்கு எதிர்பாராத எண்ணிக்கையில் தொகுதிகளை அள்ளிக் கொடுத்தது, உடன் இருந்த தோழமைக் கட்சிகளுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியதாக வெளிப்படையாகப் பேசினார்.
அதேபோல, விஜய் தலைமையிலான தவெகவின் அரசியல் வளர்ச்சியைத் திமுக ஆரம்பத்திலேயே குறைத்து மதிப்பிட்டதே அவர்களின் மிகப்பெரிய வீழ்ச்சிக்கு வழிகோலியது என்றும் திருமாவளவன் விமர்சித்துள்ளார். விஜய்யை ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளை எனத் தாம் கடுமையாக எதிர்த்துப் பேசிய போதும், திமுக தலைமை அவர் மீது எந்தவிதமான எதிர் அரசியலையும் செய்யாமல் மெத்தனமாக இருந்தது என்றார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் விஜய் தாமதமாக வந்ததற்காக அவர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து, அவரது அரசியலை அப்போதே அம்பலப்படுத்தியிருக்க வேண்டும் எனத் தாம் வலியுறுத்தியும் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார். தவெக கூட்டணிக்குச் செல்லும் முடிவை எடுத்ததற்காகத் தம் மீதும், விசிக மீதும் அற்பத்தனமான விமர்சனங்களை முன்வைத்தவர்கள், 100% இந்தத் தோல்விக்குத் திமுகவே காரணம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் எனத் திருமாவளவன் அதிரடியாக முடித்துள்ளார்.





