“எங்களை கோவிலுக்கு நேர்ந்துவிட்ட மாடு மாதிரி ரோட்டுல விட்டுட்டீங்க!” – மேடையில் கதறிய சீமான்!

திரைத்துறையில் உதவி இயக்குநராகவும், குணச்சித்திர நடிகராகவும்  தனது பயணத்தைத் தொடங்கி, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நாம் தமிழர் என்கிற அரசியல் கட்சியைத் தொடங்கியவர் சீமான். திராவிட மற்றும் தேசியக் கட்சிகளுக்கு மாற்றாகத் தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்து உருவெடுத்த இக்கட்சிக்கு, குறிப்பிடத்தக்க அளவில் தமிழக இளைஞர்களின் ஆதரவு கிடைத்து வந்தது. இதன் பிரதிபலிப்பாகக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 30 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, சுமார் 8 சதவீத வாக்கு வங்கியுடன் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியின் நிலையை எட்டியது.

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று, சீமான் உள்ளிட்ட சிலர் முதன்முறையாகச் சட்டமன்றத்திற்குள் நுழைவார்கள் எனத் தொண்டர்களாலும், அரசியல் பார்வையாளர்களாலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் போனதுடன், பெரும்பாலான தொகுதிகளில் வைப்புத்தொகையையும் (Deposit) அக்கட்சி இழந்தது. இந்தத் தேர்தல் முடிவு சீமானுக்குப் பெரும் ஏமாற்றத்தையும், மக்கள் மீதான அதிருப்தியையும் ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

தன் மனக்குமுறலை மேடைகளில் வெளிப்படுத்தி வரும் சீமான், நேற்று நடைபெற்ற பொதுநிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றுகையில் தனது கடுமையான ஆதங்கத்தை ஆவேசமாக வெளிப்படுத்தினார். “நாங்கள் போடாத போராட்டம் இல்லை, பெறாத வழக்குகள் இல்லை, பார்க்காத சிறைக்கொட்டடி இல்லை… ஆனால் இவ்வளவு தியாகங்கள் செய்த எங்களை, கோவிலுக்கு நேர்ந்துவிட்ட மாடு மாதிரி ரோட்டில் அநாதையாக விட்டுவிட்டீர்கள். ஆனால், வந்தவன் போனவனையெல்லாம் கோட்டைக்கு அனுப்பி வைத்து அழகு பார்க்கிறீர்கள்” எனப் பொங்கித் தீர்த்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "திமுகவின் வளர்ப்பு சரியில்லை!" – முதல்வர் குறித்து சர்ச்சைப் பேச்சு: திமுகவுக்கு பாடம் புகட்டுவார்கள் என அமைச்சர் மரிய வில்சன் சீற்றம்!

15 ஆண்டுகால அரசியல் போராட்டத்திற்குப் பிறகும், சட்டமன்றப் பிரதிநிதித்துவம் கிடைக்காத விரக்தியில் சீமான் பேசிய இந்த உருக்கமான பேச்சு, தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் காரசாரமான விவாதப் பொருளாக மாறியுள்ளது.