தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சியின் மதவாத அரசியலை வீழ்த்துவதற்காக, தமிழகத்தில் பரம எதிரிகளாக இருக்கும் தி.மு.க-வும், தமிழக வெற்றிக் கழகமும் (த.வெ.க) ஒரே அணியில் திரள வேண்டும் என்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் கருத்துக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிண்டலாகப் பதிலடி கொடுத்துள்ளார். இதனால் தமிழக அரசியல் களம் திடீர் சூடேறியுள்ளது.
தங்கள் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரை தி.மு.க இழுத்துக் கொண்ட போதிலும், தான் தி.மு.க-வுக்கு எதிராகப் பேசாமல் தேசிய அளவிலான பார்வையோடு (National Perspective) சிந்திப்பதாகத் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாகப் பேசிய அவர், “நான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மட்டும் மனசில் வச்சோ அல்லது எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பாதிப்பை மனசில் வச்சோ பேசல. பா.ஜ.க-வுக்கு எதிராகத் தேசிய அளவில் ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டும். கொள்கை எதிரியாக இருந்தாலும் த.வெ.க-வும் அந்த அணியில் இருக்கணும், பா.ஜ.க-வை எதிர்க்கும் தி.மு.க-வும் அதுல இருக்கணும். இதுதான் என் பார்வை” என்றார்.
மேலும் தனது இந்த பரந்த அரசியல் பார்வையைத் தமிழக அரசியல்வாதிகளாலோ அல்லது ஊடகவியலாளர்களாலோ புரிந்து கொள்ள முடியாது எனத் திருமாவளவன் ஆவேசமாகச் சாடினார். “நான் இப்படிப் பேசினால் திருமாவளவன் குழப்புகிறார் என்று கூறுவார்கள். அது அவர்களின் புரிதலில் உள்ள சிக்கலே தவிர, என்னுடைய பார்வையில் எந்தக் குழப்பமும் இல்லை” என்றும் அவர் தெளிவுபடுத்தினார். தி.மு.க-விடம் இதுகுறித்து முறைப்படி பேசியுள்ளீர்களா என்ற கேள்விக்கு, “பொறுத்திருந்து பார்க்கலாம்” என்று பதிலளித்தார்.
இதற்கிடையில், தி.மு.க மற்றும் த.வெ.க-வை இணைக்க முயற்சிக்கும் திருமாவளவனின் இந்த தேசியப் பரிந்துரை குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குத் தனது பாணியில் பதிலளித்த வைகோ, “அவருடைய இந்த உலகளாவிய பரிந்துரைக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த உலக சமாதான முயற்சிக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவருக்கு எப்போதாவது நோபல் பரிசு கிடைத்தால், கண்டிப்பாக எனக்கு நன்றி சொல்லச் சொல்லுங்கள்” எனத் தூக்கலான நையாண்டியுடன் பதிலளித்தார். வைகோவின் இந்த கிண்டல் பேச்சு அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.





