தமிழ்நாடு அரசியலுக்கும் திரைத்துறைக்கும் இடையிலான பிணைப்பு என்பது பல தசாப்த காலங்களாக மாறாத ஒரு வரலாறாகவே நீடித்து வருகிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், கலைஞர் மு. கருணாநிதி, புரட்சித் தலைவி ஜெயலலிதா, கேப்டன் விஜயகாந்த் வரிசையில், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வரை, தங்களுக்கான சினிமா இமேஜை சக்திவாய்ந்த அரசியல் மூலதனமாக மாற்றியமைத்துள்ளனர். அந்த வரிசையில், ‘மக்கள் செல்வன்’ என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதியும் தனது அரசியல் வருகைக்கான அஸ்திவாரத்தை ரகசியமாக அமைத்து வருகிறாரா என்ற கேள்வியும், விவாதமும் தற்போது தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் புயலாக வெடித்துள்ளது.
சமீபத்தில் பிக் பாஸ் மேடைகளில் தலைமைப் பண்பு குறித்து விஜய் சேதுபதி பேசிய கருத்துகள், புதிய அரசியல் கட்சியின் ஆதரவாளர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதும், அதற்கு ஆதரவாகப் பல்வேறு அரசியல் கட்சிகள் களமிறங்கியதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அந்த காரசாரமான அரசியல் சர்ச்சையின் சூடு தணிவதற்குள், தற்போது விஜய் சேதுபதி எடுத்துள்ள புதிய நகர்வு, அரசியல் பார்வையாளர்களின் புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.
தனது ‘அகில இந்திய விஜய் சேதுபதி நற்பணி இயக்கத்தின்’ தலைமை ஒருங்கிணைப்பாளராக பி.பிரசாத் என்பவரை விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளார். அவருக்கு வெறும் ரசிகர் மன்றப் பொறுப்புகள் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் மாவட்ட மற்றும் மண்டல அளவில் அமைப்புகளைப் பலப்படுத்துதல், புதிய நிர்வாகிகளை உருவாக்குதல் மற்றும் பூத் கமிட்டி அமைப்பிற்கு இணையான அதிதீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்துதல் போன்ற அதிரடிப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னதாகப் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்றங்களை ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்றும், தளபதி விஜய் தனது மன்றங்களை ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்றும் மாற்றியமைத்து, அடிமட்டக் கட்டமைப்பை வலுப்படுத்திய பிறகே தீவிர அரசியலில் தடம் பதித்தனர். அதே பாணியை இப்போது விஜய் சேதுபதியும் கையில் எடுத்துள்ளது தற்செயலானது அல்ல என்று அரசியல் விமர்சகர்கள் அடித்து கூறுகின்றனர்.
எந்தவித ஆடம்பரமும் இன்றி, அடித்தட்டு மக்களுடன் இயல்பாகப் பழகக்கூடிய ‘மக்கள் செல்வன்’ பிம்பம், மேடைகளில் எவ்விதத் தயக்கமுமின்றி எதார்த்தமாகப் பேசும் துணிச்சல் ஆகியவை விஜய் சேதுபதிக்குக் களத்தில் மிகப்பெரிய பிளஸ் பாயிண்டாகப் பார்க்கப்படுகிறது. தனது நற்பணி இயக்கத்தை மாநிலம் தழுவிய அளவில் வலுப்படுத்தும் இந்த புதிய வேகம், தமிழ்நாட்டின் தற்போதைய பலமுனை அரசியல் போட்டியில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் மிக தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.