“திருப்பூர் வருவாரா விஜய்?” – அவிநாசி, பெருமாநல்லூர் பிரச்சாரம் ரத்து எனத் தகவல்? தவெக-வின் அதிரடி முடிவும் பின்னணியும்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 14) திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி மற்றும் பெருமாநல்லூர் பகுதிகளில் பிரச்சாரம் செய்யவிருந்தார். ஆனால், கடந்த சில நாட்களாக அவரது தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஏற்பட்டுள்ள தொடர் மாற்றங்கள் மற்றும் ரத்து நடவடிக்கைகள், இன்றைய திருப்பூர் பிரச்சாரம் குறித்தும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.

சமீபத்தில் சென்னை வில்லிவாக்கம், தி.நகர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை (அறந்தாங்கி) ஆகிய பகுதிகளில் நடைபெறவிருந்த விஜய்யின் பிரச்சாரங்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டன. காவல் துறை நான்கு மணி நேரப் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரினால், ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி அளிப்பதாகவும், இது ஜனநாயக விரோதமானது என்றும் தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார். இதேபோன்ற “போலீஸ் முட்டுக்கட்டை” காரணமாகவே பல இடங்களில் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு: தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை விஜய்யின் பிரச்சாரங்களுக்குப் பொத்தாம் பொதுவாகத் தடை விதிக்கவில்லை. ஆனால், விஜய்யைப் பார்க்கக் கூடும் லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்களால் போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசல் (Stampede) ஏற்பட வாய்ப்புள்ளதாகக் காவல் துறை அறிக்கை அளிக்கிறது. இதன் அடிப்படையில், குறுகிய இடங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், சுவிதா (Suvidha) போர்ட்டலில் முறைப்படி விண்ணப்பிக்கவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "க்ளைமாக்ஸை நெருங்கும் அரசியல்!" இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்; 118 ஆதரவு கடிதங்களுடன் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறாரா?

திருப்பூர் நிலவரம்: இன்று மாலை பெருமாநல்லூர் மற்றும் அவிநாசியில் நடைபெறவிருந்த பிரச்சாரத்திற்கும் இதே போன்ற பாதுகாப்புச் சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. தவெக நிர்வாகிகள் இன்று காலை வரை பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்து வந்தாலும், தலைமையிடமிருந்து “முறையான அனுமதி மற்றும் கால அவகாசம்” கிடைக்காத பட்சத்தில், இங்கும் பிரச்சாரம் ரத்து செய்யப்படலாம் அல்லது மாற்றப்படலாம் எனத் தகவல்கள் கசிகின்றன.

தமிழக தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஒரு புதிய கட்சியின் தலைவராக விஜய் தனது கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாமல் தவிப்பது அவரது தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய திருப்பூர் வருகை குறித்து தவெக அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடும் வரை, அவிநாசி மற்றும் பெருமாநல்லூர் பகுதிகளில் ஒருவிதத் தவிப்பும் எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

Leave a Comment