NEET UG Re-Exam Extension: நீட் தேர்வு எழுதுவோருக்கு மாஸ் அப்டேட்… தேர்வு நேரத்தை அதிரடியாக நீட்டித்தது தேசிய தேர்வு முகமை… ஜூன் 21-ல் புதிய டைமிங் இதோ!

ஜூன் 21 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நீட் இளநிலை (NEET UG 2026) மறு தேர்வு எழுதும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தேசிய தேர்வு முகமை (NTA) ஒரு மிக முக்கிய மற்றும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நீட் மறு தேர்வுக்கான ஒட்டுமொத்த கால அளவு தற்பொழுது 195 நிமிடங்களாக (3 மணி நேரம் 15 நிமிடங்கள்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 3 மணி நேரமாக (180 நிமிடங்கள்) மட்டுமே இருந்த தேர்வு கால அளவு, தற்பொழுது கூடுதலாக 15 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டு 3.15 மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமையின் புதிய உத்தரவின்படி, வருகிற ஜூன் 21 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இந்த நீட் மறு தேர்வானது, பிற்பகல் 2.00 மணிக்குத் தொடங்கி மாலை 5.15 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அறையில் மாணவர்கள் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திடுவது மற்றும் பிற சரிபார்ப்புப் படிவங்களைப் பூர்த்தி செய்வது போன்ற நிர்வாக நடைமுறைகளால் மாணவர்களின் உண்மையான தேர்வு எழுதும் நேரம் வீணாகக் கூடாது என்பதற்காகவே இந்த கூடுதல் 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக என்டிஏ விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  சிபிஎஸ்இ +2 ரிசல்ட் அவுட்! 17.68 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில் 85.20% தேர்ச்சி!

இந்த நேர நீட்டிப்பு மட்டுமின்றி, மாணவர்களின் வசதிக்காக வினாத்தாள் புத்தகத்தில் (Question Booklet) கணக்கீடுகளைச் செய்வதற்கான ரஃப் (Rough Work) பக்கங்களின் எண்ணிக்கை 2 பக்கங்களில் இருந்து 4 பக்கங்களாக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், இடது கை பழக்கம் உள்ள மாணவர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, 2 ரஃப் பக்கங்கள் வினாத்தாளின் தொடக்கத்திலும், மீதமுள்ள 2 பக்கங்கள் வினாத்தாளின் இறுதியிலும் இருக்குமாறு புதிய வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றங்கள் தமிழ் உள்ளிட்ட அனைத்து 13 பிராந்திய மொழி வினாத்தாள்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 3 அன்று நடந்த தேர்வு முறைகேடு புகார்களால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த புதிய மாற்றங்களுடன் ஜூன் 21-ல் மறு தேர்வு பாதுகாப்பாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.