Paruthiveeran Saravanan’s Wife Breaks Down! விவாகரத்து செய்யாமலேயே 2வது கல்யாணம்! வீட்டில் சிசிடிவி-யை திருடிட்டாங்க… உயிருக்கு பயந்து போலீசில் தஞ்சம்!

தமிழ் திரையுலகில் 90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து, பின்னர் கார்த்தியின் ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் சித்தப்பு கதாபாத்திரத்தின் மூலம் மிகப்பெரிய கம்பேக் கொடுத்தவர் நடிகர் சரவணன். அண்மையில் ராயன், ஜெய்லர் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ள இவரது குடும்ப வாழ்க்கை தற்பொழுது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. நடிகர் சரவணனின் முதல் மனைவியான சூரியஸ்ரீ, சென்னை மௌலிவாக்கம் காவல் நிலையத்தில் தனது கணவரால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி அதிரடியாகப் புகார் அளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய சூரியஸ்ரீ, “நாங்கள் இருவரும் கடந்த 2003-ஆம் ஆண்டு காதலித்துச் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்டோம். ஆரம்பக் காலத்தில் அவர் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்டபோது, எனது கஸ்டம்ஸ் கிளியரிங் ஏஜென்ட் தொழில் மூலம் கிடைத்த வருமானத்தில் நான்தான் அவரைப் பார்த்துக்கொண்டேன். எங்களுக்குக் குழந்தை இல்லாத நிலையில், என்னை விவாகரத்து செய்யாமலேயே ஸ்ரீதேவி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, நான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் எதிர்த்த வீட்டிலேயே குடித்தனம் வைத்துள்ளார்” என்று குற்றம் சாட்டினார். இதுதொடர்பான விவாகரத்து மற்றும் பராமரிப்பு வழக்குகள் (Maintenance Case) நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

மேலும் அவர் கூறுகையில், சரவணன் தன்னைத் தொடர்ந்து ஆபாச வார்த்தைகளால் திட்டியும் அடித்தும் டார்ச்சர் செய்வதாகவும், தனது பாதுகாப்பிற்காக வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி (CCTV) கேமராக்களைத் தான் ஊருக்குச் சென்றிருந்த நேரத்தில் சரவணன் ஆட்களை வைத்து அகற்றிவிட்டதாகவும் தெரிவித்தார். “வீட்டில் தற்பொழுது கேமரா இல்லை; அங்கு சென்றால் என்னை அவர்கள் கொலை செய்தால் கூட வெளியில் தெரியாது. அந்த பயத்தில் தான் நான் இன்னும் வீட்டுக்கே போகாமல் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளேன். தனக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்குச் சரவணன் தான் பொறுப்பு” என்று கண்ணீருடன் கூறிய சூரியஸ்ரீ, இந்த விவகாரத்தை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.