தமிழக சட்டமன்றத் தேர்தலில் சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற த.வெ.க-வைச் சேர்ந்த தமிழக நிதி அமைச்சர் மரியா வில்சன் மற்றும் பல்வேறு தொகுதிகளின் எம்.எல்.ஏ-க்கள் தங்களின் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளுக்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே நகர் தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிட்டு மரியா வில்சன் வெற்றி பெற்றார். இவரது தேர்தல் பிரச்சாரத்தின் போது பல்வேறு விதிமுறை மீறல்கள் நடைபெற்றதாகவும், இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கு எதிரானது என்றும் கூறி, அவரது வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி மருத கணேசன் என்ற வாக்காளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இதேபோல், தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்களின் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.
உயர்நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ்: இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு, அமைச்சர் மரியா வில்சன் உள்ளிட்ட 6 சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த தேர்தல் வழக்குகள் தொடர்பாக அடுத்த 4 வாரங்களுக்குள் தங்களின் விரிவான பதிலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
யார் யாருடைய வெற்றிகளுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்ற விவரம் வருமாறு:
-
திருவெறும்பூர் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ நாவல்பட்டு விஜய் (எ) விஜயகுமார் வெற்றியை எதிர்த்து தி.மு.க வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
-
ஆத்தூர் தொகுதி த.வெ.க வேட்பாளர் நாசி ராஜா, அங்கு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் ஐ.பி.பெரியசாமியின் மகன் ஐ.பி.செந்தில்குமாரின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
-
திருவள்ளூர் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ டாக்டர் அருண்குமாரின் வெற்றியை எதிர்த்து தி.மு.க வேட்பாளர் விஜி ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
-
மொடக்குறிச்சி தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ டி.சண்முகத்தின் வெற்றியை எதிர்த்து வாக்காளர் பெரியசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
-
பர்கூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ ஆர்.சி.கோவிந்தராஜன் வெற்றியை எதிர்த்து கீதா என்ற வாக்காளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரணை: இதேபோன்ற மற்றொரு வினாடியில், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் த.வெ.க நிர்வாகியும் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்து அ.தி.மு.க-வைச் சேர்ந்த பி.பி.பிரபுவும், மயிலம் தொகுதி அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வெற்றியை எதிர்த்து கமலக்கண்ணன் என்ற வாக்காளரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும், ஜோலார்பேட்டை தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வெற்றியை எதிர்த்து ராமமூர்த்தியும், திருமயம் தொகுதியில் தி.மு.க முன்னாள் அமைச்சர் ரகுபதியின் வெற்றியை எதிர்த்து இரண்டு தேர்தல் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மணுக்களில் உள்ள சில தொழில்நுட்பக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மனுதாரர்களுக்குக் காலஅவகாசம் வழங்கி வழக்குகளை வெவ்வேறு தேதிகளுக்குத் தள்ளி வைத்தார். மேலும், தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்தல் வழக்குகள் அனைத்தும் இனி வரும் காலங்களில் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதி அறிவித்துள்ளார். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் பதவிகளுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள இந்த தொடர் தேர்தல் வழக்குகளால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





