தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் பிரபல நடிகை திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான விளம்பரம் மற்றும் கருத்துகளைப் பதிவிட்ட விவகாரத்தில், ஆன்லைன் தொழிலதிபரான பிரவீன் கணேசன் (35) சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். ‘காமகார்ட்’ (Kamakart) உள்ளிட்ட பல ஆன்லைன் நிறுவனங்களின் தலைவராகச் செயல்பட்டு வரும் பிரவீன் கணேசன், கடந்த ஜூன் மாதம் சீனாவில் உள்ள குவாங்டாங் பகுதியில் தங்கியிருந்தபோது இந்தச் சர்ச்சைக்குரிய விளம்பரத்தைப் பதிவேற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் இந்தப் பதிவுக்குக் கடும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்ததைத் தொடர்ந்து, பிரவீன் கணேசன் அந்தப் பதிவை உடனடியாக நீக்கிவிட்டார். இருப்பினும், சமூக ஆர்வலர் ஒருவர் அந்தப் பதிவின் ஸ்கிரீன்ஷாட் (Screenshot) மற்றும் இணையமுகவரி (URL) ஆகியவற்றைப் ஆதாரமாகச் சேகரித்து சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையின் தொடர்ச்சியாக, சென்னை காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் உத்தரவின் பேரில் பிரவீன் கணேசனுக்கு எதிராக லுக் அவுட் சுற்றறிக்கை (Look Out Circular – LOC) பிறப்பிக்கப்பட்டு, நாட்டின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை அனுப்பப்பட்டது. இந்நிலையில், ஹாங்காங்கில் இருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த பிரவீன் கணேசனை, லுக் அவுட் சுற்றறிக்கையின் அடிப்படையில் குடிவரவுத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்திக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தகவலறிந்த சென்னை சைபர் கிரைம் தனிப்படை காவல்துறையினர் உடனடியாக டெல்லிக்கு விரைந்தனர். அங்கு டெல்லி நீதிமன்றத்தில் பிரவீன் கணேசனை ஆஜர்படுத்திய காவல்துறையினர், அவரைச் சென்னைக்கு அழைத்து வர முறையான டிரான்சிட் வாரண்ட் (Transit Warrant) பெற்றனர். அதன்பின்னர், அவர் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
முன்னதாக, 2025-ம் ஆண்டில் சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் மீது லஞ்சக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தித் தனது ‘வின்ட்ராக்’ (Wintrack) நிறுவனச் செயல்பாடுகளை நிறுத்தப்போவதாக அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர் பிரவீன் கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் குறித்து அவதூறான மற்றும் கண்ணியமற்ற கருத்துகளைப் பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை தொடரும் என சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.





