கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், தவெக மாநாட்டு நெரிசல் விபத்தில் உயிரிழந்த 41 பேரின் நினைவாகச் சம்பவ இடத்திலேயே நினைவுத் தூண் அமைக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட 32 பேருக்கு அரசுப் பணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் சி. ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புகள் தற்பொழுது பொதுமக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கடுமையான விவாதங்களையும், பரபரப்பான கருத்து மோதல்களையும் உருவாக்கியுள்ளது.
இது குறித்துப் பேசிய ஒரு தரப்பினர், “கூட்ட நெரிசலில் செத்துப்போனவர்களுக்கு எல்லாம் அரசு வேலை கொடுப்பது முற்றிலும் தவறான முன்னுதாரணம். இனிமேல் எதற்கு இளைஞர்கள் கஷ்டப்பட்டுப் படித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (Employment) பதிவு செய்துவிட்டுச் சீனியாரிட்டிக்காகக் காத்துக் கிடக்க வேண்டும்? படிப்பு, காலேஜ் எதுவுமே தேவையில்லை, ஏதாவது ஒரு கட்சிக் கூட்டத்திற்குப் போய் விபத்தில் சிக்கி செத்துப்போனால் அரசு வேலை கன்பார்ம் என்கிற நிலை உருவாகிவிடும்” என்று தங்களின் ஆக்ரோஷமான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், விபத்து நடந்த இடத்தில் 41 பேருக்கும் நினைவுத் தூண் அமைப்பது முறையான புரோட்டோகால் இல்லாத ஒரு விஷயம் என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர். நாளை கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கும், முன்பு மகாமகக் குளத்தில் கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கும் கூட நினைவுத் தூண் வைக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழும் என்பதால், அரசு நிர்வாக ரீதியாக இது தவறான முடிவு என்றும், உச்சநீதிமன்றத்தில் இந்த தற்காலிக வேலைவாய்ப்பு வழக்கு நிலுவையில் உள்ளதை உற்று நோக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதே நேரத்தில், இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஆதரவுக் குரல்களும் பொதுமக்கள் மத்தியில் ஒலிக்கின்றன. குடும்பத் தலைவர்களையோ அல்லது தங்களின் பிள்ளைகளையோ இழந்து தவிக்கும் அந்தப் ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை யோசித்துப் பார்க்கும்போது, முதலமைச்சர் விஜய் எடுத்த இந்த அரசுப் பணி முடிவு அந்தப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய மறுவாழ்வு மற்றும் ஒரு நல்ல மனிதநேயமிக்க விஷயம் என்று மற்றொரு தரப்பினர் வாதிடுகின்றனர்.
விஜயை ஒரு ‘கொலைகாரன்’ என்று அரசியல் ரீதியாக முத்திரை குத்தி, மன உளைச்சலுக்கு ஆளாக்கியவர்களுக்கு இந்த மனிதாபிமான நடவடிக்கைகள் ஒரு தகுந்த பதிலடி என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இனி வரும் ஏழு தலைமுறைக்கும் இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கக் கூடாது என்கிற விழிப்புணர்விற்காகவே இந்த நினைவுத் தூண் அமைக்கப்படுவதாகவும், இருப்பினும் இதனை அரசுப் பணத்தில் செய்யாமல் விஜயின் சொந்தப் பணத்தில் அமைப்பதே இன்னும் சிறப்பாக இருக்கும் என்றும் பொதுமக்கள் தங்களின் நடுநிலையான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.





