“ரூ.35 லட்சம் ஐடி வேலைக்கு பை-பை!” – கன்டென்ட் கிரியேஷனில் இறங்கி ஒரே ஆண்டில் ரூ.1 கோடி சம்பாதித்த தம்பதி!

தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT Sector) ஆண்டுக்கு ரூ.35 லட்சம் சம்பாதித்து வந்த ஆஷிஷ் குப்தா மற்றும் முஸ்கான் மிட்டல் என்ற இந்தியத் தம்பதி, தங்களது கார்ப்பரேட் வேலையைத் துறந்து முழுநேரக் கன்டென்ட் கிரியேட்டர்களாக மாறியதுடன், கடந்த 3 ஆண்டுகளில் தங்களின் உண்மையான வருமானம் எவ்வளவு என்ற முழு விபரத்தையும் இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் வெளிப்படையாக வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

முன்னதாக, ஆஷிஷ் குப்தா ஆண்டுக்கு ரூ.12 லட்சம் சம்பளத்தில் டேட்டா அனாலலிஸ்ட் (Data Analyst) ஆகவும், முஸ்கான் மிட்டல் ஆண்டுக்கு ரூ.23 லட்சம் சம்பளத்தில் சாப்ட்வேர் டெவலப்பராகவும் (Software Developer) பணியாற்றி வந்தனர். 2023 ஆம் ஆண்டு மே மாதம் இவர்கள் மேற்கொண்ட வியட்நாம் சுற்றுலா வீடியோ இணையத்தில் 20,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கடந்து வைரலானதைத் தொடர்ந்து, இவர்கள் டிராவல் மற்றும் லைஃப்ஸ்டைல் கன்டென்ட் உருவாக்கத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கினர். பகுதிநேரமாகத் தொடங்கிய இந்த முயற்சியில் 2023 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் தங்களின் முதல் பிராண்ட் ஒப்பந்தமாக ரூ.15,000 பெற்ற இவர்கள், அந்த ஆண்டின் இறுதியில் பகுதிநேர வருமானமாக ரூ.6.5 லட்சத்தை ஈட்டினர்.

இதனைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டில் தங்களின் ஐடி வேலைகளை முழுமையாக ராஜினாமா செய்துவிட்டு கன்டென்ட் கிரியேஷனில் தீவிரமாக இறங்கினர். ஏஜென்சிகளுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியதும், அஃபிலியேட் மார்க்கெட்டிங் மற்றும் குரூப் ட்ரிப் (Group Trips) போன்ற புதிய வழிகள் மூலம் வருமானம் பெருகியது. இதனால் 2024 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.45.3 லட்சம் வருவாய் ஈட்டினர். இது அவர்கள் ஐடி வேலையில் வாங்கி வந்த ரூ.35 லட்சம் மொத்தச் சம்பளத்தை விட அதிகமாகும்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  வாட்ஸ்அப்பில் திடீர் மாற்றம்? பயனர்களிடம் பிறந்த தேதி கேட்கும் மெட்டா! பின்னணி என்ன?

தொடர்ந்து 2025 ஆம் ஆண்டில், இடைத்தரகு ஏஜென்சிகளைத் தவிர்த்து நேரடியாகப் பிராண்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது, யூடியூப் மற்றும் பேஸ்புக் தளங்களின் நேரடி மானிடைசேஷன், டிஜிட்டல் தயாரிப்புகள் விற்பனை மற்றும் அஃபிலியேட் மூலம் ரூ.1.09 கோடி என்ற பிரமாண்டமான மைல்கல்லை அடைந்தனர். நடப்பு ஆண்டில் முதல் 4 மாதங்களிலேயே ரூ.21.6 லட்சத்தை ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ள இந்தத் தம்பதி, இது செலவினங்களைக் கணக்கிடாத மொத்த வருவாய் என்றும், சீசனுக்கு ஏற்ப மாற்றமடையும் இந்தத் துறையில் முறையான திட்டமிடல் அவசியம் என்றும் விளக்கமளித்துள்ளனர்.

இந்தத் தம்பதியின் வெற்றிக் கதை இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் உலா வரத் தொடங்கியுள்ளன. பல இளைஞர்கள் இவர்களின் துணிச்சலான முடிவையும் உழைப்பையும் பாராட்டி வரும் நிலையில், அனுபவமிக்க நெட்டிசன்கள் சிலர், “கன்டென்ட் கிரியேஷன் துறை அனைவருக்கும் ஒரே மாதிரியான வெற்றியைத் தராது. இதில் மிகப்பெரிய ஆபத்தும் நிலையற்ற தன்மையும் உள்ளது. எனவே முறையான திட்டமிடல் இல்லாமல் யாரும் ஐடி வேலையைத் துறக்க வேண்டாம்” என்றும் எச்சரித்து வருகின்றனர்.