வேலையே இல்லாம சம்பளம் வாங்குறீங்களா? ஆபத்து தான்! புனே இளைஞரின் வைரல் வீடியோ!

கார்ப்பரேட் உலகத்தில் வேலை செய்பவர்களுக்கு அதிகபட்ச டார்கெட், இரவோடு இரவாக நடக்கும் மீட்டிங்குகள், இறுக்கமான கெடு (Deadlines) போன்ற விஷயங்கள்தான் மிகப்பெரிய மன அழுத்தத்தைக் கொடுக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இதைவிட மிகவும் ஆபத்தான மற்றும் பயங்கரமான ஒரு கட்டம் கார்ப்பரேட் வாழ்க்கையில் இருக்கிறது என புனேயைச் சேர்ந்த கார்ப்பரேட் ஊழியர் ஒருவர் பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது!

கார்ப்பரேட் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்ட நிஹார் பாட்டீல் என்பவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (@fit.nihar) வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கார்ப்பரேட் வாழ்க்கையில் உங்கள் மீது யாருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பது அல்லது உங்களுக்குச் செய்ய வேலையே இல்லாமல் இருப்பதுதான் மிகவும் ஆபத்தான நிலை என்று எச்சரித்துள்ளார்.

“வேலையே இல்லாமல் சும்மா இருப்பதை விட, கையில் வேலை இருப்பது எவ்வளவோ மேல்! கைநிறைய வேலை இருக்கும் போதுதான் நீங்கள் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறீர்கள், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுகிறீர்கள், தவறுகளைச் செய்து திருத்திக் கொள்கிறீர்கள், உங்கள் டீமில் ஒரு தவிர்க்க முடியாத நபராக மாறுகிறீர்கள். அதுவே உங்கள் கரியர் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்,” என்று நிஹார் அந்த வீடியோவில் விளக்கமளித்துள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "நெக்ஸ்ட் PM விஜய் தான்!" 50 வருட அரசியலுக்கு பொறாமை என இளைஞர்கள் அதிரடி பேட்டி!

புதிய திட்டங்களைக் கையாளாமல், பொறுப்புகளை ஏற்காமல், புதிய திறன்களை வளர்த்துக் கொள்ளாமல் சும்மா இருந்து கொண்டு மாதா மாதம் சம்பளம் மட்டும் வாங்குவதில் திருப்தி அடைந்துவிடாதீர்கள் என்றும் அவர் எச்சரிக்கிறார். “நீங்கள் எதுவும் கற்றுக்கொள்ளாமல் கடத்தும் ஒவ்வொரு மாதமும், அந்த இடைவெளியை வேறொருவர் நிரப்பிக் கொண்டிருக்கிறார். கார்ப்பரேட் உலகம் மிக வேகமாகவும், தொழில் நுட்பங்கள் அதைவிட வேகமாகவும் மாறி வருகின்றன,” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அளவோடு இருக்கும் பணிச்சுமை (Pressure) என்பது நீங்கள் இன்னும் களத்தில் இருக்கிறீர்கள் என்பதற்கான அடையாளம் என்றும், அளவுக்கு அதிகமான வசதியும் சௌகரியமும் (Comfort Zone) வந்துவிட்டால் “நான் நிஜமாகவே வளர்கிறேனா அல்லது சும்மா சம்பளம் மட்டும் வாங்குகிறேனா?” என்று உங்களையே கேட்டுக்கொள்ள வேண்டிய நேரம் இது என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் இதற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். “உங்களுக்கு வேலையே தரப்படவில்லையென்றால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் லே-ஆஃப் (Lay-off) செய்யப்படலாம் என்பதற்கான முதல் ரெட் ஃபிளாக் (Red Flag) அதுதான்” எனப் பல அனுபவமிக்க ஊழியர்கள் கமெண்ட் செக்ஷனில் பதிவிட்டு வருகின்றனர்.