157 பேர் பலியான கொடூர போயிங் விபத்து: 5 ஆண்டுகள் கழித்து வெளியான அதிரடி தீர்ப்பு… ரூ.276 கோடி இழப்பீடு!

கடந்த 2019-ஆம் ஆண்டு இத்தியோப்பியாவில் 157 பேரின் உயிரைப் பறித்த போயிங் 737 மேக்ஸ் (Boeing 737 MAX) கொடூர விபத்தில் உயிரிழந்த ஐக்கிய நாடுகள் சபையின் (UN) அதிகாரி மைக்கேல் ரியான் குடும்பத்தினருக்கு நஷ்டஈடாகச் சுமார் ரூ.276 கோடி ($33 Million) வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கிற்கு எதிராக மைக்கேல் ரியானின் மனைவி கன்னோல்லி ரியான் தொடர்ந்த சிவில் வழக்கில், அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள நீதிமன்றம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

அயர்லாந்தின் கிளேர் கௌண்டியைச் சேர்ந்த மைக்கேல் ரியான், ஐநாவின் உலக உணவுத் திட்டத்தில் (WFP) முக்கியப் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். அஃப்கானிஸ்தான், இலங்கை, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பல திட்டங்களில் இவர் தீவிரமாகப் பங்காற்றியுள்ளார். குறிப்பாக, பங்களாதேஷில் ரோஹிங்கியா அகதிகளை வெள்ளப்பெருக்கிலிருந்து காக்கவும், லைபீரியாவில் எபோலா வைரஸ் பரவலின் போது மருத்துவ முகாம்களை அமைக்கவும் மைக்கேல் ரியான் பெரும் பங்காற்றியதாக ஐநா புகழாரம் சூட்டியுள்ளது.

2019 மார்ச் 10 அன்று இத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் நைரோபி நோக்கிப் புறப்பட்ட ‘ஈடி302’ போயிங் 737 மேக்ஸ் விமானம், டேக்-ஆஃப் ஆன 6 நிமிடங்களிலேயே நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இந்த கொடூர சம்பவத்தில் விமானத்திலிருந்த 157 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விசாரணையில், விமானத்தின் ‘ஆட்டோமேட்டட் சேஃப்டி சிஸ்டம்’ (MCAS) தவறான சென்சார் தரவுகளால் விமானத்தின் முன்பகுதியைக் கீழே தள்ளியதே விபத்துக்கு முதன்மைக் காரணம் எனத் தெரியவந்தது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "பாகிஸ்தான், ஈரான் வழியாக ரயிலா?" - இந்தியாவிற்கு புதிய தரைவழி பாதையை முன்மொழியும் ரஷ்யா!

நீதிமன்றத் தீர்ப்பு குறித்துப் பேசிய குடும்ப வழக்கறிஞர் ஸ்டீவன் சி மார்க்ஸ், “எந்தவொரு தொகையும் இழந்த உயிரையோ அல்லது குடும்பத்தின் துயரத்தையோ ஈடுசெய்ய முடியாது. இருப்பினும், போயிங் நிறுவனத்தைப் பொறுப்பேற்க வைக்கும் இந்தத் தீர்ப்பு ஒரு மிக முக்கியமான மைல்கல்” எனக் குறிப்பிட்டுள்ளார். அதேவேளையில், விபத்தில் உறவுகளை இழந்த குடும்பத்தினரிடம் போயிங் நிறுவனப் பிரதிநிதி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளதோடு, நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாகத் தெரிவித்துள்ளார்.