சமூக வலைதளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் சிறார்களுக்கு கடுமையான மனநல பாதிப்புகளை ஏற்படுத்தியதாகவும், குழந்தைகள் தொடர்பான பாலியல் குற்றங்கள் மற்றும் ஆபத்தான அம்சங்களை மூடி மறைத்து இயங்கியதாகவும் தொடரப்பட்ட வழக்கில், மெட்டா (Meta) நிறுவனத்திற்கு நியூ மெக்சிகோ நீதிமன்றம் சுமார் 567 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,000 கோடியை விட அதிகம்) கூடுதல் நிதியை வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கின் முதல் கட்டத்தில் ஏற்கனவே விதிக்கப்பட்ட 375 மில்லியன் டாலர் அபராதத்தையும் சேர்த்து, மெட்டா செலுத்துவதற்கான மொத்தத் தொகை 942 மில்லியன் டாலரை (சுமார் ரூ.8,400 கோடி) எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தின் தலைமை வழக்கறிஞர் ரவுல் தோரெஸ் கடந்த 2023-ஆம் ஆண்டு மெட்டா நிறுவனத்திற்கு எதிராக இந்த வழக்கைத் தொடர்ந்தார். ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் உள்ள அல்காரிதம் வடிவமைப்பு, சிறுவர்களைத் தொடர்ச்சியாகச் செயலிக்கு அடிமையாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதில் வரம்பற்ற ஆபத்துகள் இருப்பதை அறிந்தும் நிறுவனம் அதனைப் பொதுமக்களிடம் இருந்து மறைத்ததாகவும் நீதிமன்றத்தில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும், சிறுவர்கள் மீதான பாலியல் சுரண்டல்கள் தொடர்பாகத் தங்கள் சொந்த ஊழியர்கள் எச்சரித்த போதிலும், லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மெட்டா நிர்வாகம் செயல்பட்டதாக மாநில அரசு குற்றஞ்சாட்டியது.
நியூ மெக்சிகோ மாவட்ட நீதிமன்ற நீதிபதி பிரையன் பீட்ஷீட் பிறப்பித்த தீர்ப்பின்படி, தற்போது விதிக்கப்பட்டுள்ள 567 மில்லியன் டாலர் நிதியில் பெரும் பகுதி, அதாவது 420 மில்லியன் டாலர் தொகை பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான மனநல சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையானது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், திரையிடல் சேவைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காகச் செலவிடப்பட உள்ளது. மேலும், 13 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களைக் கண்டறிந்து அவர்களின் தகவல்களை நீக்கவும், பாதுகாப்பு நெறிமுறைகளைத் தொடர்ச்சியாக மேம்படுத்தவும் மெட்டாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக மெட்டா செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தங்கள் தளங்களில் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தொடர்ச்சியாகப் பாடுபட்டு வருவதாகவும், உண்மைகளைத் தவறாகச் சித்தரிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகச் சட்டப் போராட்டம் தொடரும் என்றும் நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொழில்நுட்ப உலகின் முன்னணி நிறுவனமான மெட்டாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் விதித்துள்ள இந்த பிரம்மாண்ட அபராதம், உலக அளவில் சமூக வலைதளங்களின் போக்கைக் கட்டுப்படுத்துவதில் ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.





