ஹாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நெட்பிளிக்ஸ் (Netflix) பண மோசடி வழக்கில், பிரபல இயக்குனர் கார்ல் ரின்சுக்கு (Carl Rinsch) 30 மாதங்கள் (இரண்டரை ஆண்டுகள்) சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து ‘ஒயிட் ஹார்ஸ்’ (White Horse – பின்னர் ‘கான்குவெஸ்ட்’ எனப் பெயரிடப்பட்டது) என்ற அறிவியல் புனைகதை தொடரை தயாரிப்பதற்காகப் பெற்ற 11 மில்லியன் டாலர் பணத்தை, தனது சொந்த தேவைகளுக்காகப் பயன்படுத்திய குற்றத்திற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸ் (Keanu Reeves) நடித்த ’47 ரோனின்’ (47 Ronin) திரைப்படத்தை இயக்கியதன் மூலம் உலகளவில் அறியப்பட்டவர் கார்ல் ரின்ச். நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த வெப் சீரிஸ் தயாரிப்பிற்காக 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் ஏற்கனவே 44 மில்லியன் டாலர்களை கார்ல் ரின்சுக்கு வழங்கியிருந்தது. இதனைத் தொடர்ந்து, 2020ஆம் ஆண்டில் தயாரிப்புப் பணிகளை முடிக்க கூடுதல் நிதி தேவைப்படுவதாகக் கூறி மேலும் 11 மில்லியன் டாலர்களை அவர் வாங்கியுள்ளார். ஆனால், அந்தப் பணத்தை சீரிஸ் தயாரிப்பிற்குப் பயன்படுத்தாமல், தனது சொந்த வங்கி கணக்குகளுக்கு மாற்றி கிரிப்டோகரன்சி மற்றும் பங்குகளில் முதலீடு செய்து நஷ்டமடைந்துள்ளார். எஞ்சிய தொகையைக் கொண்டு ரோல்ஸ் ராய்ஸ், பெராரி போன்ற சொகுசு கார்கள், ஆடம்பர கைக்கடிகாரங்கள் மற்றும் ஆடைகளை வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது விசாரணையில் அம்பலமானது.
இந்த வழக்கில் கார்ல் ரின்சுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். கார்ல் ரின்சின் தரப்பில் அவரது மனநலப் பாதிப்புகள் மற்றும் தவறான மருந்துப் பயன்பாடு காரணமாகவே இந்தத் தவறுகள் நடந்ததாகக் கூறி, தண்டனையைக் குறைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது. கார்ல் ரின்சின் நெருங்கிய நண்பரான நடிகர் கீனு ரீவ்ஸும், அவருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஒரு கடிதத்தை சமர்ப்பித்து கருணை காட்டுமாறு கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெட் ராகோஃப், கார்ல் ரின்சின் மனநலப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு தண்டனையைக் குறைப்பதாகக் கூறினார். இருப்பினும், நெட்பிளிக்ஸ் நிறுவனத்தை திட்டமிட்டு ஏமாற்றி பொய் கூறியதை ஏற்க முடியாது எனக் கூறி அவருக்கு 30 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு அந்த 11 மில்லியன் டாலர் தொகையை அவர் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும், மூன்று ஆண்டுகள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு ஹாலிவுட் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.





