“யூடியூப்லயும் இன்ஸ்டாகிராம்லயும் வீடியோ போட்டுகிட்டு நேரத்தை வீணடிக்கிறான்…” என்று இனி யாருமே உங்களைச் சொல்லிவிட முடியாது! காரணம், சமூக வலைத்தளங்களில் கண்டெண்ட் உருவாக்கிப் புகழ்பெற்ற ‘இன்ஃப்ளூயன்ஸர்’ (Influencer) ஆக விரும்புபவர்களுக்காகவே, அதிகாரப்பூர்வமான ஒரு Bachelor Degree பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தி ஒட்டுமொத்த உலகத்தையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகம்!
அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ‘அரிசோனா ஸ்டேட் யுனிவர்சிட்டி’ (ASU), தனது இதழியல் கல்லூரி வாயிலாக இந்த 4 ஆண்டு Bachelor Degree in Content Creation பட்டப்படிப்பைத் தொடங்கியுள்ளது. கேமரா முன் எப்படிப் பேசுவது, வீடியோ எடிட்டிங், ஃபாலோயர்களை எப்படி அதிகரிப்பது, பாட்காஸ்டிங் மற்றும் சோஷியல் மீடியா மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டுவது எப்படி என அனைத்து வித்தைகளையும் இந்த படிப்பில் முறைப்படி கற்றுக் கொடுக்கப் போகிறார்கள்.
ஏன் இந்த திடீர் மாற்றம்? காரணம் – ‘கிரியேட்டர் எகனாமி’ (Creator Economy) என்று அழைக்கப்படும் டிஜிட்டல் சந்தையின் அசுர வளர்ச்சிதான். வரும் 2027-ஆம் ஆண்டிற்குள் இத்துறை சுமார் 480 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் பல லட்சம் கோடி ரூபாய்) சந்தையாக உருவெடுக்க உள்ளது. மேலும், இன்றைய இளைய தலைமுறையினரில் (Gen-Z) சுமார் 57% பேர் எதிர்காலத்தில் ஒரு பிரபல இன்ஃப்ளூயன்ஸராக மாறுவதையே தங்களது லட்சியமாகக் கொண்டுள்ளனர்.
பெரிய பெரிய பன்னாட்டு நிறுவனங்களும், பிராண்டுகளும் தங்களது பொருட்களை விளம்பரப்படுத்தவும், வாடிக்கையாளர்களைச் சென்றடையவும் லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து தொழில்முறை கண்டெண்ட் கிரியேட்டர்களை வேலைக்கு அமர்த்தி வருகின்றன. வெறும் பொழுதுபோக்காகப் பார்க்கப்பட்ட சோஷியல் மீடியா வீடியோக்களை, ஒரு கௌரவமான உயர்கல்வி பட்டப்படிப்பாக மாற்றி அரிசோனா பல்கலைக்கழகம் எடுத்திருக்கும் இந்த அதிரடி முடிவு, உலகளாவிய கல்வித் துறையில் ஒரு புதிய புரட்சிக்கே வித்திட்டுள்ளது!





