யுபிஐ பரிவர்த்தனை கட்டண திட்டம் கைவிடப்பட வேண்டும்! அன்புமணி ராமதாஸ் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்!

கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ (UPI) செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படும் 2,000 ரூபாய்க்கும் கூடுதலான வணிகப் பயன்பாட்டுக்கான பரிவர்த்தனைகளுக்கு 0.40 விழுக்காடு வரை கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2,000 ரூபாய்க்கும் குறைவான வணிகப் பரிவர்த்தனைகளுக்கும், தனிநபர்களுக்கு இடையிலான பணப் பரிமாற்றங்களுக்கும் கட்டணம் கிடையாது என்றும், மாதம் 1 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் சிறு வணிகர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நடவடிக்கை மூலம் நேரடியாகத் தனிநபர்களுக்குப் பாதிப்பு இல்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டாலும், நடைமுறையில் பொதுமக்களே இதனால் மறைமுகமாகப் பாதிக்கப்படுவார்கள் என அவர் எச்சரித்துள்ளார்.

பெரு வணிகர்கள் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் செலுத்தும் கட்டணத்தைச் சொந்த லாபத்திலிருந்து ஏற்க முன்வர மாட்டார்கள் என்றும், அந்த இழப்பை ஈடுகட்டப் பொருட்களின் விலைகளை உயர்த்தி மறைமுகமாகக் கட்டணப் சுமையை மக்கள் மீதே சுமத்துவார்கள் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே விலைவாசி உயர்வால் சிரமப்பட்டு வரும் மக்களின் துயரத்தை இந்த நடவடிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் தற்போதைய இலவச நடைமுறையே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.