தளபதி விஜய் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் உலகளவில் திரைக்கு வந்துள்ள நிலையில், இப்படம் குறித்த சுவாரசியமான பின்னணித் தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் ‘ஜன நாயகன்’ என்பதை இயக்குனர் ஹெச். வினோத் சமீபத்திய நேர்காணலில் உறுதிப்படுத்தியுள்ளார். மூலக்கதையில் சுமார் 50 சதவீதத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு, தமிழ் ரசிகர்களுக்கும் விஜய்யின் அரசியல் மற்றும் மாஸ் இமேஜிற்கும் ஏற்ப கதையை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ‘பகவந்த் கேசரி’ படத்தின் அசல் இயக்குனரான அனில் ரவிபுடி ‘ஜன நாயகன்’ திரைப்படம் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இது குறித்துப் பேசிய அனில் ரவிபுடி, “விஜய் சார் ‘பகவந்த் கேசரி’ படத்தை மிகவும் ரசித்துப் பார்த்தார். குறிப்பாக அதில் சொல்லப்பட்டிருந்த பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்துக்கள் அவருக்கு மிகவும் பிடித்திருந்தன. பாலய்யா சாருக்காக நான் உருவாக்கிய தெலுங்கு கமர்ஷியல் பாணியை, தமிழ் சூழலுக்கும் விஜய் சாரின் இமேஜிற்கும் ஏற்றவாறு இயக்குனர் ஹெச். வினோத் மிக நேர்த்தியாகக் கையாண்டுள்ளார்” எனக் கூறியுள்ளார்.
மேலும், “இது வெறும் ரீமேக் மட்டுமல்லாமல் விஜய்யின் அரசியல் வருகைக்கு ஏற்ற மிக முக்கியமான திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது” என்றும் அனில் ரவிபுடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ‘பகவந்த் கேசரி’ படத்தின் மையக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு, இரண்டாம் பாதியை முற்றிலும் புதிய கோணத்தில் ஹெச். வினோத் உருவாக்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் ‘ஜன நாயகன்’ படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.





