காவிரி நீரில் கைவிரித்த கர்நாடகா!: உச்ச நீதிமன்றத்தில் திமுக அதிரடி அவசர மனு! பின்னணி என்ன?

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை உடனடியாகத் திறந்துவிடக் கோரித் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்குமுறைக் குழு (CWRC) மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் (CWMA) உத்தரவுகளைக் கர்நாடக அரசு வெளிப்படையாகவே மதிக்கத் தவறியதைத் தொடர்ந்து, மாநிலத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க திமுக இந்த அதிரடி சட்டப் போராட்டத்தைக் கையிலெடுத்துள்ளது.

திமுக தலைவரின் உத்தரவின் பேரில், கட்சியின் விவசாயிகள் அணித் தலைவர் ஏ.கே.எஸ். விஜயன் அவர்கள் மூலமாக மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் இந்த அவசர மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். கடந்த ஜூலை 29, 2026 அன்று காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி, தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய தண்ணீரை உடனடியாகத் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் மிகத் தெளிவாகக் கேட்கப்பட்டுள்ளது.

மேலும், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆரம்பத்தில் 7,000 கியூசெக்ஸ் தண்ணீர் திறக்கப் பரிந்துரைத்த நிலையில், அதைக் குறைத்து 3,500 கியூசெக்ஸ் மட்டுமே தர முடியும் என கர்நாடகா அடம்பிடித்தது. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவின் நிலைப்பாட்டை நிராகரித்து, தமிழ்நாட்டிற்கான நீரை உறுதிசெய்து உத்தரவிட்டது. எனினும், அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாட்கள் கடந்தும் கர்நாடகா அதனைச் செயல்படுத்தாமல் இழுத்தடித்து வருகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டு, தமிழக விவசாயிகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  மக்களை தவிக்க விட்டு ஓடியது யார்? CM விஜய்க்கு கனிமொழி எம்பி கொடுத்த நெத்தியடி பதிலடி!

தமிழக அரசின் நடவடிக்கை மந்தமாக இருப்பதாகக் சுட்டிக்காட்டியுள்ள திமுக தரப்பு, கர்நாடகாவின் இந்த நீதிமன்ற அவமதிப்புச் செயலுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் உடனடியாக தலையிட்டுத் தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. நிலுவையில் உள்ள 9.46 டி.எம்.சி நீர் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையிலும், தினசரி தேவைக்கான தண்ணீரைத் தாமதமின்றி வழங்கவும் கர்நாடகாவிற்கு சட்டப்பூர்வமாக உத்தரவிட வேண்டும் என்று இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.