விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் திடீர் கைது! கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயனை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ள சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டியில் நடைபெற்ற நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், மிரட்டும் தொனியிலும் பேசியதாக தவெக சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அதிகாலை வேளையில் விளாத்திகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து மார்க்கண்டேயனை கைது செய்தனர். கைது நடவடிக்கையின் போது அவரது ஆதரவாளர்கள் காவல் துறை வாகனத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் தற்காலிகமாகப் பரபரப்பு நிலவியது.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட நிலையில், முதல்வர் குறித்து பேசியதாக கைதாகும் இரண்டாவது திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கைது நடவடிக்கைக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அரசியல் விமர்சனங்களை நேருக்கு நேர் எதிர்க்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும் என்றும், உடனடியாக மார்க்கண்டேயனை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.