“போலீஸ் கார்ல வர முடியாது.. என் கார்ல வாங்க!” – முதல்வர் விஜய்யை விமர்சித்த அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது! ஆத்தூர் போலீசாரின் அதிரடி!

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் திமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் எம்.எல்.ஏ-வுமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் விஜய்யை விமர்சனம் செய்து பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்த நிலையில், ஆத்தூர் காவல்துறையினர் உடனடியாகச் செயல்பட்டு அவரைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

கைது நடவடிக்கைக்காக ஆத்தூர் போலீசார் அனிதா ராதாகிருஷ்ணனின் வீட்டிற்குச் சென்றபோது அங்கு சுவாரஸ்யமான காட்சிகள் அரங்கேறின. “வாங்க போலீஸ் கார்ல போலாம்..” என்று போலீசார் கூறியதற்கு, “அதெல்லாம் முடியாது சார்.. நீங்க வேணா என் கார்ல வாங்க..!” என்று அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளித்துச் சலசலப்பை ஏற்படுத்தினார். போலீசாரின் வாகனத்தில் செல்ல அவர் மறுப்பு தெரிவித்தது சிறிது நேரம் பரபரப்பை உண்டாக்கியது. இருப்பினும், சட்ட நடவடிக்கையில் உறுதியாக இருந்த போலீசார், அனிதா ராதாகிருஷ்ணனைத் தங்களது வாகனத்திலேயே ஏற்றி அழைத்துச் சென்றனர்.

காவல் வாகனத்தில் ஏறிய பிறகு, அங்கிருந்த ஆதரவாளர்களைப் பார்த்துப் புன்னகையுடனும், கைகளை அசைத்து ‘ஹாய்’ சொல்லியும் அவர் சென்ற விதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கைது நடவடிக்கை குறித்த தகவல் பரவியதும் ஆத்தூர் காவல் நிலையம் முன்பு திமுகவினர் மற்றும் ஆதரவாளர்கள் அதிக அளவில் திரண்டதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல்வரை விமர்சனம் செய்த விவகாரத்தில், உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததைத் தொடர்ந்து, இந்த கைது நடவடிக்கை தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.