டாஸ்மாக் நிர்வாக முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், கைது நடவடிக்கையைத் தவிர்க்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தீவிரமாக விசாரித்த உயர்நீதிமன்றம், தற்போது முன்ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.
முன்னதாக செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான நேரடி ஆதாரங்களும் இல்லை என்றும், டாஸ்மாக் அதிகாரிகள் செய்த தவறுகளுக்கு முன்னாள் அமைச்சரைப் பழிவாங்கும் நோக்கில், அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதங்களை முன்வைத்தனர். மேலும், ஏற்கனவே மற்றொரு வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள நிலையில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதால் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆனால், காவல் மற்றும் அரசுத் தரப்பில் ஆஜரான மாநில தலைமை வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். டாஸ்மாக் நிர்வாகத்தில் காலி பாட்டில்கள் கொள்முதல், மதுபானக் கொள்முதல் மற்றும் பார்கள் ஏலம் விட்டதில் சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். மேலும், 40க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் முக்கிய ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும், புலன் விசாரணை தற்போதுதான் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், செல்வாக்கு மிக்க நபருக்கு இந்த நேரத்தில் முன்ஜாமீன் வழங்கினால் விசாரணை முற்றிலுமாகப் பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதற்கும் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளதற்கும் முதற்கட்ட ஆதாரங்கள் உள்ளதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். மேலும், புலன் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு உள்ளது என்பதை சுட்டிக்காட்டி, செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.





