திரைத்துறையில் உச்சம் தொட்டவுடன் அடுத்த கட்டமாக அரசியல் வெளிச்சத்தை நோக்கிப் படையெடுப்பது கோடம்பாக்கத்தின் எழுதப்படாத விதியாகவே மாறிவிட்டது. சமீபத்தில் தவெக (TVK) தலைவராக ‘தளபதி’ விஜய் அடைந்த அரசியல் வெற்றி, திரையுலகின் இன்னும் சில முன்னணி நடிகர்களுக்கும் அரசியல் ஆசையைத் தூண்டியுள்ள நிலையில், அடுத்தடுத்து புதிய நடிகர்கள் கட்சி தொடங்கப் போவதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் புதிதாக இரண்டு நடிகர்கள் அரசியலுக்கு வரப்போவது குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பியக் கேள்விக்கு, திமுக பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் தனது வழக்கமான கிண்டலும் நக்கலும் கலந்த பாணியில் மிகக் காரசாரமான பதிலை அளித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகனிடம், திரையுலகைச் சேர்ந்த மேலும் இரண்டு நடிகர்கள் அரசியலில் காலடி வைக்கத் தயாராகி வருவது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்குச் சற்றே எள்ளலுடன் சிரித்த அவர், “அதெல்லாம் நிக்காது.. எல்லோரும் எம்.ஜி.ஆர், ஜோசப் விஜய் ஆகிவிட முடியாது!” என்று ஒரே அடியில் ஒட்டுமொத்தப் பேச்சையும் முடித்து வைத்தார்.
திரைப்படப் புகழை மட்டும் வைத்துக்கொண்டு அனைவரும் அரசியலில் நிலைத்து நின்றுவிட முடியாது என்பதையும், மக்களோடு மக்களாகக் களத்தில் நின்று போராடி வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர் அல்லது பெரும் மக்கள் கூட்டத்தை ஒரே நாளில் திரட்டிய ‘ஜோசப்’ விஜய்யைப் போல எல்லோராலும் ஜொலிக்க முடியாது என்பதையும் துரைமுருகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூத்த திராவிட இயக்கத் தலைவரான துரைமுருகனின் இந்த அதிரடி பதில், தற்போது அரசியலுக்கு வர ஆயத்தமாகும் அந்த இரண்டு நடிகர்களுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. கோடம்பாக்கத்து ‘ஸ்டார் மாஸ்’ தேர்தல் களத்தில் ‘ஓட்டு மாஸாக’ மாறுமா அல்லது துரைமுருகன் கணித்தது போல் காற்றோடு போகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!