“அடுத்து மேக்கப் மேனுக்குத்தான் பதவி!” முதல்வர் விஜய்யை கிழித்து தொங்கவிட்ட EPS!

‘ஜனநாயகன்’ படத் தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணாவை தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக முதல்வர் ஜோசப் விஜய் நியமித்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த நியமனத்தை முன்வைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் விஜய்யை காரசாரமாகவும் கிண்டலாகவும் விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “ஜனநாயகன் படத்தினுடைய தயாரிப்பாளரை இன்றைக்கு அவர் கொண்டு போய் டெல்லி சிறப்புப் பிரதிநிதியா போட்டிருக்காரு. அடுத்து இன்னொரு எடிட்டிங் பண்ற யாரோ ஒருத்தரை ஒரு பதவியில போட்டிருக்கதா எனக்குத் தகவல் வந்திருக்கு. இதையெல்லாம் பார்க்கும்போது, இன்னும் கொஞ்ச நாள் போனா அவரோட மேக்கப் மேனுக்கும் ஏதாவது ஒரு அரசுப் பதவியை அவர் கொடுத்துடுவார் போல! ஆக, அரசாங்கத்தையே ஒரு சினிமா செட் மாதிரி மாத்தி வச்சிருக்காங்க. அரசாங்கம் என்பது இன்னைக்கு ஒரு கேள்விக்குறியாகிவிட்டது” என்று ஆவேசமாகச் சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், நிர்வாக உத்திகளைப் பற்றி முதல்வர் விஜய்க்குப் பாடம் எடுத்தார். “அரசியல் கட்சி ஆரம்பிச்சு ரெண்டு வருஷம்தான் ஆகுது. இவருக்கு என்ன நிர்வாக அனுபவம் இருக்கு? எப்பப் பார்த்தாலும் இவரோட தேர்தல் வகுப்பாளர் (வியூகவாதி) தான் இவருக்கு அட்வைசர். ஆனால், இதற்கு முன்பு இருந்த எங்களது அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, அனுபவம் வாய்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் துறை செயலாளர்களைத்தான் நாங்கள் ஆலோசகர்களாக நியமித்து அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டோம். ஆனால், முதல்வர் விஜய் தனக்குத் தேர்தல் நேரத்தில் ஆதரவாகவும், சினிமா கூட்டாளிகளாகவும் இருந்தவர்களை எல்லாம் இன்னைக்கு அரசாங்கத்தின் ஆலோசகர்களாகப் போட்டு ஒரு புதுமையை நிகழ்த்தியுள்ளார்” என்று கேலி செய்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  பாஜக - திமுக ரகசிய உறவா? அமைச்சர் நிர்மல் குமாருக்கு தமிழிசை கொடுத்த மரண அடி! "முதல்ல அந்த மின்வெட்டை சரி பண்ணுங்க!" ஃபைல் காணாமல் போன விவகாரத்தையும், சிபிசிஐடி தாமதத்தையும் போட்டுடைத்த பாஜாக மூத்த தலைவர்!

மேலும், காவேரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு காட்டி வரும் அலட்சியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். கர்நாடகாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தும், தமிழக எல்லையான டெல்டாப் பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், விவசாயிகள் கடும் வறட்சியில் தவிக்கும் போது முதல்வர் விஜய் விவசாயிகள் மீது எந்தவொரு அக்கறையும் இல்லாமல் மௌனம் சாதித்து வருவதாகக் கூறினார்.

இறுதியாக, அதிமுகவை விமர்சித்த காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ், “நூற்றாண்டு கண்ட பேரியக்கமான காங்கிரஸ் கட்சியின் நிலைமை இன்றைக்குத் தமிழகத்தில் ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக’ மிகவும் பரிதாபமாக மாறியுள்ளது. கொள்கையும் இல்லாமல், கூட்டணியும் இல்லாமல், தங்களது சுயலாபத்திற்காக திமுக கூட்டணியில் இருந்து விலகி, தற்போது டிவிஜே பக்கம் சாய்ந்து பதவிகளை வாங்குவதற்காகத் திரிகிறார்கள். இதில் எங்கே கொள்கை இருக்கிறது?” எனத் தனது பேச்சை நிறைவு செய்தார்.