‘நாங்கள் மன்னராட்சியின் மகன்கள் இல்லை!’ எதிர்க்கட்சிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பதிலடி… சட்டப்பேரவையில் பரபரப்பு!

தமிழகச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கடுமையான விமர்சனங்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அளித்த காரசாரமான பதிலடி, மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.

முன்னதாகப் பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், ஆளுங்கட்சியில் யார் அமைச்சர், யார் எம்.எல்.ஏ. என்றே அடையாளம் தெரியவில்லை என்றும், அதிகாரப் படிநிலையே குழப்பமாக உள்ளது என்றும் சாடியிருந்தார். இதற்கு அவையில் உடனடியாகக் குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “எங்கள் கட்சியில் யார் அமைச்சர், யார் சட்டமன்ற உறுப்பினர் என்று தெரியவில்லை எனக் கூறிய எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒன்றை மிகத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இங்கு அமர்ந்திருப்பவர்கள் யாரும் பண்ணையாரின் பிள்ளைகளும் இல்லை, மன்னராட்சியின் மகன்களும் இல்லை. நாங்கள் சாதி பலமோ, மத பலமோ, பண பலமோ எதுவும் இல்லாத மிகச் சாதாரணக் குடும்பங்களைச் சேர்ந்த எளிய மனிதர்கள்” என்று ஆவேசமாகப் முழங்கினார்.

தொடர்ந்து தனது உரையைத் தீவிரப்படுத்திய அவர், “வாரிசு அரசியலையும், குடும்பப் பாரம்பரியத்தையும் மட்டுமே நம்பி அரசியலுக்கு வந்தவர்களுக்கு, எவ்வித பின்னணியும் இன்றி அடித்தட்டு மக்களுக்காக உழைத்து சட்டமன்ற உறுப்பினர்களாக உயர்ந்திருக்கும் எளிய தொண்டர்களின் மதிப்பு புரிய வாய்ப்பில்லை. மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் எங்கள் ஆட்சியில், அதிகாரத் தோரணைகள் இன்றி அனைவரும் சமமான தகுதியோடும் அர்ப்பணிப்போடும் மக்கள் பணியாற்றி வருகிறோம். அதனால்தான் எங்களை உங்களால் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியவில்லை” என்று சுட்டிக்காட்டினார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  தவெக மாநாட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு அரசு வேலை! "படித்த இளைஞர்கள் நிலை என்ன?"- நெட்டிசன்கள் கடும் கொந்தளிப்பு!

அதிகாரப் பின்னணியோ அல்லது பெரிய குடும்பப் பாரம்பரியமோ இன்றி சாதாரண பின்புலத்தில் இருந்து வந்தவர்களே பேரவையில் ஏழை எளிய மக்களின் உண்மையான குரலாக ஒலிக்கிறார்கள் என்பதைத் திட்டவட்டமாகப் பதிவு செய்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் இந்த அதிரடி உரை, சட்டமன்றத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதோடு சமூக வலைதளங்களிலும் தற்போது தீயாகப் பரவி வருகிறது.