‘இந்தியாவின் நாளைய பிரதமர் விஜய் தான்!’ பேரவையில் கில்லி சரத் காரசார பேச்சு… சட்டசபையில் பரபரப்பு!

தமிழகச் சட்டமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் கில்லி சரத், தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் விஜயைப் புகழ்ந்து தள்ளியதுடன், “எங்கள் இதயத்திலும், இல்லத்திலும், கோட்டையிலும் முதல்வராக இருக்கும் எங்கள் தலைவா… இந்தியாவின் நாளைய பிரதமர் நீங்கள்தான்” என்று முழங்கியது மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேரவைத் தலைவர் முன்னிலையில் பேசிய அவர், “பிறந்து சிறந்த தலைவர்கள் மத்தியில் சிறந்தே பிறந்தவர் எங்கள் தலைவர். இயேசு பிறந்ததை கிறிஸ்தவர்களும், நபிகள் நாயகம் பிறந்ததை இஸ்லாமியர்களும் கொண்டாடுவதைப் போல, நாடு முழுவதும் கொண்டாடும் எழுச்சி நாளாக ஜூன் 22 அமைந்துள்ளது. மக்களாட்சி தரும் மாண்பாளராக விளங்கும் எங்கள் தலைவரை 80 வயதைக் கடந்தவர்கள் பேரன் ஆட்சி என்றும், 70 வயதில் உள்ளவர்கள் மகனாட்சி என்றும், 40 வயதில் உள்ளவர்கள் நண்பன் ஆட்சி என்றும், குழந்தைகள் விஜய் மாமா ஆட்சி என்றும் கொண்டாடுகிறார்கள். தாய் வயிற்றில் உள்ள குழந்தைகள் கூட நாளைய ஆட்சி கில்லி ஆட்சிதான் எனக் கூறுகிறார்கள். எனவே, அடுத்த 50 ஆண்டுகளுக்குத் தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சிதான் தொடரும்” எனத் தீவிரமாகப் பேசினார்.

விஜய்யின் வெற்றித் திரைப்படங்களான ‘கில்லி’, ‘சர்க்கார்’, ‘மெர்சல்’, ‘பகவதி’, ‘திருமலை’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ போன்ற பெயர்களைத் தனது உரையில் சுவாரஸ்யமாக இணைத்துப் பேசிய அவர், “தமிழகத்திற்குப் புதிய கீதையைப் படைக்க சர்க்காரில் சரித்திரம் படைத்தாய்! ஜனநாயகத்தைக் காத்த எங்கள் தலைவா… நீங்கள் பேசினால் எதிரிகளுக்கு மெர்சல்தான்! நீங்கள் சொல்லி அடித்தாலும் சொல்லாமல் அடித்தாலும் கில்லிதான்” என்று கவித்துவமாக வர்ணித்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "தவெக அப்படி செய்திருக்க கூடாது!" ஆட்சி அமைக்க உரிமை கோரியதில் விஜய் செய்த சொதப்பல் என்ன? டி.கே.எஸ்.இளங்கோவன் விளாசல்!

மேலும், தான் மிகச் சாதாரணமாக இருந்த சூழலில் தனக்கு அங்கீகாரம் வழங்கி, தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்து 35,621 வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற வைத்த விஜய்க்குத் தன் ஆயுளையும் குடும்பத்தின் ஆயுளையும் காணிக்கையாக்குவதாக உருக்கமாகத் தெரிவித்தார். “முதலமைச்சரின் வாக்கை வேத வாக்காக ஏற்று 1,08,967 வாக்குகளை அளித்து வெற்றி பெற வைத்த தாம்பரம் தொகுதி மக்களுக்கும், தேர்தல் களத்தில் உழைத்த தவெக சகோதர சகோதரிகளுக்கும் எனது பாசமிகு நன்றிகள். ஏஎம், பிஎம் பார்க்காமல் உழைக்கும் எங்கள் சிஎம் தான் நாளைய இந்தியாவின் பிஎம்” என்று அவர் கூறி முடித்த உரை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.