“லாபநோக்கற்ற அமைப்புகளின் நிதி!”: ‘டோரதி’ படம் குறித்த மோகன் ஜி சர்ச்சைக் கருத்து… பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்!

‘திரௌபதி’ மற்றும் ‘பகாசூரன்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிப் பிரபலமான இயக்குநர் மோகன் ஜி, சமீபத்தில் வெளியான ‘டோரதி’ திரைப்படத்தின் பின்னணியில் எல்ஜிபிடிகியூ+ (LGBTQ+) சமூகம் சார்ந்த கருத்துகள் குறித்துத் தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் வெளியான ‘டோரதி’ திரைப்படம், அதில் இடம்பெற்ற எல்ஜிபிடிகியூ+ கருப்பொருள்கள் காரணமாகப் பல்வேறு தரப்பினரிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தது.

இந்நிலையில், எந்தவொரு திரைப்படத்தின் பெயரையும் நேரடியாகக் குறிப்பிடாமல் தனது ‘எக்ஸ்’ (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ள மோகன் ஜி, “தமிழ் சினிமாவில் எல்ஜிபிடிகியூ+ ஆதரவு என்பது வெறும் யோசனையோ அல்லது புரட்சியோ அல்ல. இது இளைஞர்களைக் கவர்ந்து நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைச் சீரழிப்பதற்காகப் பல்வேறு சர்வதேச லாபநோக்கற்ற அமைப்புகளிடமிருந்து (NGOs) பெறப்படும் நிதியுதவியாகும்” என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “வட அமெரிக்காவைச் சீரழித்த இவர்கள் தற்போது இந்தியாவைக் குறிவைக்கிறார்கள்; ஏற்கனவே பல நாடுகள் விழித்துக் கொண்டுவிட்டன, நாமும் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் மோகன் ஜியின் இந்த கருத்து வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அவருக்குக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். மோகன் ஜி தனது முந்தைய திரைப்படங்களில் சாதிப் பெருமைகளையும், ஆணவக் கொலைகளை நியாயப்படுத்தும் விதமான கருத்துகளையும் சித்தரித்ததாகக் குறிப்பிட்ட நெட்டிசன்கள், “சாதிப் பாகுபாட்டையும் ஆணவக் கொலைகளையும் ஊக்கப்படுத்தும் திரைப்படங்களை எடுப்பவர், கலாச்சாரத்தைப் பற்றிக் பேசுவது முரண்பாடாக உள்ளது” எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், “சுயசமூகத்திற்குள் சமத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியாத ஒருவர் மற்றவர்களுக்குப் பாடம் எடுக்க முடியாது” என்றும், “இந்தியக் கலாச்சாரத்தில் பாலின வேறுபாடுகளும் ஓரினச்சேர்க்கையும் முன்னரே இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன; ஆனால் சாதிப் பெருமைக்கு எந்தவித உயிரியல் ஆதாரமும் இல்லை” என்றும் பல பயனர்கள் மோகன் ஜியின் கருத்துக்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.