சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள டிஜிபி அலுவலகம் அருகே இன்று (ஏப்ரல் 20, 2026) மதியம் ஒரு சொகுசு கார் விபத்தை ஏற்படுத்தியதால் ராதாகிருஷ்ணன் சாலையில் பெரும் பரபரப்பு நிலவியது. அதிவேகமாக வந்த அந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த வாகனங்கள் மீது மோதியதில் பல வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.
இந்தச் சொகுசு கார் முதலில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோ மீது பலமாக மோதியது. அதன் வேகத்தில் அங்கிருந்த தடுப்புகளைத் தாண்டி, ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு கார் மற்றும் ஒரு ஆட்டோ மீதும் மோதி நின்றது. இந்த விபத்தில் ஆட்டோக்களின் பின்பகுதி மற்றும் சொகுசு காரின் முன்பகுதி கடுமையாக நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டாலும், விபத்து நடந்த இடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மெரினா போலீசார், சொகுசு காரை ஓட்டி வந்த முகமத் ஜாவித் என்பவரை உடனடியாகப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கார் மிக அதிவேகமாக வந்ததே விபத்திற்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. விபத்தின் போது அவர் மது அருந்தியிருந்தாரா? அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு காரணமா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
“திடீரென ஆட்டோ குறுக்கே வந்ததால் பிரேக் பிடிக்க முயன்றபோது விபத்து நிகழ்ந்ததாக” ஓட்டுநர் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை போன்ற நெரிசலான சாலைகளில் சொகுசு கார்கள் அதிவேகமாக ஓட்டப்படுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.





