இந்திய ரயில்வே தனது எல்லைக்குட்பட்ட ரயில் நிலையங்கள், நடைமேடைகள் மற்றும் ரயில் பெட்டிகளில் குப்பைகளை வீசி அசுத்தம் செய்யும் பயணிகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை ரூ.500-லிருந்து ரூ.1,000-ஆக உயர்த்தி அதிரடி உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பொதுச் சொத்தைப் பாதுகாக்கவும், தூய்மையைப் பராமரிக்கவும் இந்த கடுமையான நடவடிக்கை அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், பயணிகள் மீது அபராதக் சாட்டையைச் சுழற்றும் ரயில்வே நிர்வாகம், சாதாரண மக்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படைச் சேவைகளைத் துல்லியமாக நிறைவேற்றுகிறதா என்ற கூர்மையான கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் காட்டுத்தீயாக எழுந்துள்ளன.
ரயில்வே நிலையங்களிலும், குறிப்பாக தொலைதூர ரயில்களின் பொதுப் பெட்டிகளிலும் உள்ள கழிவறைகளின் சுகாதாரம் இன்னும் பெரும் சவாலாகவே உள்ளது. கழிவறைகளில் தண்ணீர் இல்லாமலும், துர்நாற்றத்துடனும் இருக்கும் சூழலில் பயணிகள் எங்கு செல்வார்கள், சுத்தமான கழிவறை வசதியை உறுதி செய்யாமல் பயணிகள் மீது மட்டும் அபராதம் விதிப்பது எந்த வகையில் நியாயம் என்று பயணிகள் கொந்தளிக்கின்றனர்.
ரயில்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து நாளுக்கு நாள் புகார்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. தரமற்ற உணவு, கெட்டுப்போன பண்டங்கள், அதிகக் கட்டணம் போன்ற சிக்கல்களுக்குப் பயணிகள் ஆளாகும்போது ரயில்வே நிர்வாகம் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் என்ன என்ற கேள்வி எழுகிறது. சுத்தத்திற்கு ₹1,000 அபராதம் வசூலிக்கும் அதே வேகத்தில், தரமற்ற உணவை வழங்கும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகிறதா என்பதும் விவாதப் பொருளாகியுள்ளது.
பல சிறிய மற்றும் நடுத்தர ரயில் நிலையங்களில் போதிய எண்ணிக்கையில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. குப்பையைப் போடுவதற்குச் சரியான வசதியைச் செய்து தராமல், அவசரப் பயணத்தில் இருக்கும் சாமானிய பயணிகளிடம் அபராதம் வசூலிப்பது நிர்வாகக் குறைபாட்டை மூடி மறைப்பதாகாதா என்ற விமர்சனமும் கேட்கிறது. குடிமக்களுக்குச் சமூகப் பொறுப்பும், தூய்மைப் பேணலும் மிக முக்கியம் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில், ₹1,000 அபராதம் வசூலிக்கும் ரயில்வே நிர்வாகம், கட்டணம் செலுத்திப் பயணிக்கும் சாமானிய மக்களுக்குச் சுகாதாரமான கழிவறை, தரமான உணவு மற்றும் பாதுகாப்பான பயணச் சூழலையும் சமரசமின்றி வழங்க வேண்டியது அதன் தலையாய கடமையாகும்.





