டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: 136 கடைகள் அடைப்பு – பணிநீக்கம் செய்ய நிர்வாகம் தீவிர ஆலோசனை!

தமிழ்நாட்டில் அரசு நிர்வாகத்தின்கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலையைக் (MRP) காட்டிலும் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாகத் தொடர்ச்சியாகப் புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்ததைத் தொடர்ந்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் மூலமாகத் தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, ஆய்வின் போது விதிகளை மீறி பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்ததாக முதற்கட்டமாக 67 ஊழியர்களும், அடுத்தகட்டமாக மேலும் 157 ஊழியர்களும் என இரு நாட்களில் மொத்தம் 224 பணியாளர்கள் தற்காலிகப் பணிநீக்கம் (Suspension) செய்யப்பட்டனர். டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியம் சமீபத்தில் ரூ.10,000 வரை உயர்த்தப்பட்ட பின்னரும், கூடுதல் தொகை வசூலித்ததால் இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்தது.

இந்த அதிரடி சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுமார் 136 டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுப்பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், பணிகளைப் புறக்கணித்துச் சட்டவிரோதமாகக் கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களின் முழு விவரங்களையும் மாவட்ட மேலாளர்கள் மூலம் டாஸ்மாக் நிர்வாகம் தீவிரமாகச் சேகரித்து வருகிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஜோமேட்டோ-ஸ்விக்கிக்கு சவால்: 10% கமிஷனில் பிளிப்கார்ட் உணவு டெலிவரி சேவை!

போராட்டத்தில் ஈடுபட்ட மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கடைகளை அடைத்த பணியாளர்கள் மீது சஸ்பெண்ட் அல்லது பணிநீக்கம் (Dismissal) உள்ளிட்ட கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து டாஸ்மாக் உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும், புகார்களைத் தெரிவிக்கத் தனியாகத் தொலைபேசி எண் மற்றும் வாட்ஸ்அப் எண்களை அரசு அறிவித்துள்ளதுடன், கூடுதல் கட்டணம் வசூலித்தால் முதல் முறையிலேயே கடும் நடவடிக்கை பாயும் எனத் தெளிவுபடுத்தியுள்ளது.