பப்களில் 21 வயசுக்கு கீழ உள்ள அனுமதிச்சா லைசென்ஸ் காலி! டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% சம்பள உயர்வு – அமைச்சர் விக்னேஷ் அதிரடி!

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றது முதல் முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு டாஸ்மாக் துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். கடந்த 15 முதல் 20 வருடங்களாக நிலவி வந்த கள்ளத்தனமான காலை நேர மதுவிற்பனை தற்பொழுது முழுமையாகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர்களிடம் கூடுதல் பணம் வசூலிக்கும் (MRP Violation) ஊழியர்கள் மீது சஸ்பெண்ட் மற்றும் பணிநீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என எச்சரித்த அவர், ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அவர்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க 25 சதவீத ஊதிய உயர்வை முதலமைச்சர் கனிவோடு ஒப்புதல் அளித்து அறிவித்துள்ளார் என்று பெருமிதத்துடன் கூறினார்.

இந்த அதிரடி ஊதிய உயர்வின்படி, உதவி விற்பனையாளர்களுக்கு (Assistant Salesman) 14,340 ரூபாயிலிருந்து 17,925 ரூபாயாகவும், விற்பனையாளர்களுக்கு (Salesman) 15,530 ரூபாயிலிருந்து 19,413 ரூபாயாகவும் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், சூப்பர்வைசர்களுக்கான ஊதியம் 17,850 ரூபாயிலிருந்து 22,313 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வால் அரசுக்குக் கூடுதலாக 110.74 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும் என்றும், ஒட்டுமொத்தமாக ஊழியர்களின் சம்பளத்திற்காக 553.72 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் விக்னேஷ் விளக்கமளித்தார். ஊழியர்களின் 20 ஆண்டுகால கோரிக்கையான இஎஸ்ஐ (ESI) மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் இனி அமல்படுத்தப்படும் என்றும், இதனால் இனி நுகர்வோர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் சஸ்பெண்ட் மட்டுமின்றி நிரந்தரப் பணிநீக்கம் செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமா ஆக்ஷன் எடுங்க!" - IAS, IPS மாநாட்டில் முதல்வர் விஜய்யின் 9 பக்க அனல் பறக்கும் உரை!

தொடர்ந்து பப்கள் மற்றும் பார்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர், “FL3 உரிமம் பெற்ற பப்கள் மற்றும் கிளப்களில் 21 வயதிற்குட்பட்ட நபர்களை அனுமதிப்பது சட்டப்படி குற்றமாகும். இதை மீறி இளைஞர்களை அனுமதிக்கும் நிறுவனங்களின் உரிமம் (License) உடனடியாக ரத்து செய்யப்படும்” என்று மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார். 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு மதுவிற்பனை செய்யக் கூடாது என்பதில் அரசு தீவிரமாக உள்ளது என்றும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். டாஸ்மாக் பார்களுக்கான டெண்டர் நடைமுறைகள் முடிய சில வாரங்கள் ஆகும் என்பதால், தற்போதைய பார்களின் உரிமம் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விக்னேஷ் தனது செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.