வறுமையும் பொருளாதாரச் சவால்களும் ஒருபோதும் திறமைக்கும் கல்வி லட்சியத்திற்கும் தடையாக முடியாது என்பதைத் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று இளம் சகோதரர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூத்த மகன் மற்றும் இரட்டை சகோதரர்கள் என மூன்று பேருமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசு மற்றும் முன்னணி மருத்துவக் கல்லூரிகளில் இடங்களைக் கைப்பற்றி ஒட்டுமொத்தக் கிராமத்தையும் பெருமிதத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் வெள்ளாங்குளி கிராமத்தைச் சேர்ந்தவர் நெசவுத் தொழிலாளி ராம்குமார் (49). இவரது மனைவி மங்கையர் திலகம். இந்தத் தம்பதியினருக்கு வெங்கட் ஸ்ரீ என்ற மூத்த மகனும், அருண் மற்றும் தரண் என்ற இரட்டை மகன்களும் உள்ளனர். நெசவுத் தொழிலில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்த போதிலும், பெற்றோர் தங்களின் மூன்று மகன்களையும் வெள்ளாங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியிலேயே படிக்க வைத்து, அவர்களின் மருத்துவக் கனவுக்கு முழு ஆதரவு அளித்து வந்தனர்.
மூத்த மகனான வெங்கட் ஸ்ரீ, கடந்த 2022-23 கல்வியாண்டில் பிளஸ்-2 முடித்து முதன்முறையாக நீட் எழுதியபோது 300 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவ இடம் கிடைக்காத போதிலும் மனம் தளராமல் மீண்டும் முயன்று 2025-இல் 420 மதிப்பெண்களும், நடப்பாண்டில் தொடர் விடாமுயற்சியால் 440 மதிப்பெண்களும் பெற்றுச் சாதனை படைத்தார். மற்றொருபுறம், இவரின் தம்பிகளான இரட்டையர்கள் அருண் 511 மதிப்பெண்களும், தரண் 494 மதிப்பெண்களும் எடுத்து அசத்தினர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில், மூத்த மகன் வெங்கட் ஸ்ரீக்கு நாகர்கோவில் அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும், அருணுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியிலும், தரணுக்கு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியிலும் பயில வாய்ப்பு கிடைத்துள்ளது. மூன்று மகன்களின் மருத்துவக் கனவு நனவானதை அடுத்து, பாளையங்கோட்டையில் நடைபெற்ற சௌராஷ்டிரா சமுதாய கலந்தாய்வுக் கூட்டத்தில் இந்தச் சகோதரர்களுக்குச் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.





