பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து! முதலமைச்சர் விஜயின் முடிவுக்கு அண்ணாமலை, டி.ஆர்.பி.ராஜா கடும் எதிர்ப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த சென்னையின் 2-வது புதிய பசுமை விமான நிலைய திட்டத்தை முழுமையாகக் கைவிடுவதாகத் தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடியாக அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் உரையாற்றிய முதல்வர் விஜய், பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 12 கிராம மக்களின் தொடர் எதிர்ப்பையும், விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். புதிய விமான நிலையத்திற்காகக் குடியிருப்பு பகுதிகளையோ, அதிக அளவிலான விவசாய நிலங்களையோ பாதிக்காத வகையில் மற்றொரு மாற்று இடம் கண்டறியப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இருப்பினும், தவெக அரசின் இந்த தீர்மானத்திற்கு பல்வேறு தரப்பிலும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனரும் தலைவருமான கே. அண்ணாமலை இந்த அறிவிப்புக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். பரந்தூர் திட்டத்தை ரத்து செய்துவிட்டுப் புதிய இடத்தை தேர்வு செய்து, அதற்கு மத்திய அரசிடமும் பல்வேறு சட்டப்பூர்வ அமைப்புகளிடமும் அனுமதிகளைப் பெற்று, நிலத்தைக் கையகப்படுத்தி புதிய விமான நிலையத்தைக் கொண்டுவர குறைந்தது 10 ஆண்டுகள் தாமதமாகும் என்று அவர் எச்சரித்துள்ளார். சென்னையின் தற்போதைய விமான நிலையம் விரிவாக்கத்திற்குப் போதுமான வசதிகள் இன்றி இருக்கும் சூழலில், இந்த தாமதம் தென்னிந்தியாவின் வர்த்தகக் கதவாக விளங்கும் சென்னைப் பெருநகரத்தின் வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கும் என்றும், ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட சுமார் 1,700 ஏக்கர் நிலத்தின் நிலை என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  விஜய்யிடம் வைகோவின் மெமோரண்டம்!: "க்ரீன் காப்பர் என்ற பெயரில் ஸ்டெர்லைட்டை மீண்டும் கொண்டு வர சதி!" முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வைகோ பகிரங்க எச்சரிக்கை!

அதேபோல, முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ளார். வல்லுநர்கள் பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு உருவாக்கிய பரந்தூர் விமான நிலைய திட்டத்தை அரசியல் காரணங்களுக்காகக் கைவிட்டுள்ளது தமிழகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு என்று அவர் கூறியுள்ளார். இந்த ரத்து நடவடிக்கையால் மாநிலத்திற்கு வரவிருந்த தொழில் முதலீடுகளும், வேலைவாய்ப்புகளும் அண்டை மாநிலங்களுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிவித்த அவர், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக இத்திட்டத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் அல்லது இந்த ஆண்டு இறுதிக்குள் உலகத்தரம் வாய்ந்த மாற்று இடத்தை அறிவிக்க வேண்டும் எனக் வலியுறுத்தியுள்ளார்.