தமிழக அரசியல் வரலாற்றிலும் சட்டமன்ற மரபுகளிலும் ஒரு புதிய மாற்றமாக, தமிழக முதல்வர் விஜய் சட்டசபையில் தனக்கென ஒதுக்கப்பட்ட பிரத்யேக இருக்கையைத் தவிர்த்து, தனது அமைச்சரவை சகாக்களுக்கு இடையே அமர்ந்து அவையை எதிர்கொண்டது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற சட்டசபை நிகழ்வின் போது நிகழ்ந்த இந்த அரிதான காட்சி தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகின்றன.
பொதுவாகச் சட்டமன்ற மரபுகளின்படி, சபாநாயகர் இருக்கைக்கு அருகில் முதலமைச்சருக்கு எனத் தனித்துவமான, வசதியான பிரத்யேக இருக்கை ஒதுக்கப்படுவது வழக்கம். முதலமைச்சருக்கு அடுத்தடுத்த இருக்கைகளில் மட்டுமே சிரேஷ்டத்துவ அடிப்படையில் அமைச்சர்கள் அமர வைக்கப்படுவர். இருப்பினும், பிற்பகல் அமர்வின் போது தனது இருக்கையிலிருந்து எழுந்த முதல்வர் விஜய், அவை முன்னவரான அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு இடையே காலியாக இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தார்.
KAS – Chief @TVKVijayHQ ! 👀 https://t.co/4VKtY8pfiD pic.twitter.com/ypAoNHwscO
— Prakash Vijay (@PrakazVijay_Of) August 27, 2026
கடந்த நூறு நாட்களுக்கு மேலாகத் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டு வரும் தமிழக வெற்றித் கழகத் தலைவர் விஜய், மகப்பேறு விடுமுறையை 365 நாட்களாக உயர்த்தியது, ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ₹41 ஆக உயர்த்தியது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். இந்த நிலையில், சட்டமன்றத்தில் தனது அமைச்சர்களுடன் நெருக்கமாக அமர்ந்து உரையாடிய காட்சி, அவர் தனது அமைச்சரவையுடன் இணைந்து செயல்படும் விதத்தைக் காட்டுவதாக ஆதரவாளர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
அதேசமயம், முதலமைச்சர் என்பவர் தனக்கான இடத்தில் அமர்ந்து அவையை வழிநடத்துவதே சட்டமன்ற மரபு என்றும், விஜய் சட்டமன்றத்தை திரைப்பட கட்டமைப்பு போலக் கையாளுவதாகவும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. சட்டமன்ற வரலாற்றில் ஒரு முதல்வர் தனது பிரத்யேக இருக்கையை விட்டுவிட்டு அமைச்சர்களின் வரிசையில் சென்று அமர்ந்தது இதுவே முதல்முறை எனக் கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.





