Jackpot for Journalists! “பத்திரிகையாளர்களுக்கு சொந்த நிலம்!” – சட்டமன்றத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்த குட் நியூஸ்!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பத்திரிகையாளர்களின் நலன் சார்ந்த மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார். ஊடகத் துறையில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்குச் சொந்த வீட்டு மனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சட்டமன்றத்தில் பதிலளித்துச் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பத்திரிகையாளர்களின் இந்த நியாயமான கோரிக்கை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் கவனத்திற்கு நேரில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்தக் கோரிக்கையைக் கேட்டறிந்த முதலமைச்சர் விஜய், பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை வழங்குவதில் மிகுந்த ஆர்வமும், அக்கறையும் காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதன் தொடர்ச்சியாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கக்கூடிய பொருத்தமான அரசு நிலங்கள் எங்கு இருக்கின்றன என்பது குறித்து முதற்கட்டமாக ஆய்வு செய்யப்பட உள்ளது. அவ்வாறு தேர்வு செய்யப்படும் அரசு நிலங்களை அடையாளம் கண்டு, தகுதியுள்ள பத்திரிகையாளர்களுக்கு முறைப்படி வீட்டு மனைகளாக ஒதுக்கி வழங்கிடத் தேவையான அனைத்து துரித நடவடிக்கைகளும் அரசின் சார்பில் எடுக்கப்படும் என அமைச்சர் சட்டப்பேரவையில் உறுதியளித்தார்.

மக்களாட்சியின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அரசு நிலங்களைக் கண்டறிந்து மனைகளாக மாற்றும் இந்த அறிவிப்பு பத்திரிகையாளர் கூட்டமைப்பினர் மற்றும் ஊடகத்துறை சார்ந்தவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.