மகாராஷ்டிராவில் ‘கர்ஃபா, தண்டியா’ விழாக்களுக்கு வி.எச்.பி திடீர் தடை உத்தரவு! மதக் கெடுபிடிகளால் கொதித்தெழும் பொதுமக்கள்!

பல்வேறு கலாச்சாரங்களும் மனித நேயமும் இணைந்து கொண்டாடும் இந்தியப் பண்டிகைகளின் சூழலில், மீண்டும் மத ரீதியிலான பிளவை ஏற்படுத்தும் வகையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி) அமைப்பு ஒரு சர்ச்சைக்குரிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வரும் அக்டோபர் 11-ம் தேதி தொடங்கவுள்ள நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, மகாராஷ்டிராவில் நடைபெறும் புகழ்பெற்ற ‘கர்ஃபா’ மற்றும் ‘தண்டியா’ நடனப் போட்டிகளில் முஸ்லிம்கள் பங்கேற்கக் கூடாது என அந்த அமைப்பு அதிரடியாகத் தடை விதித்துள்ளது.

இது குறித்துப் பேசிய வி.எச்.பி அமைப்பின் செய்தித் தொடர்பாளரும் இணைச் செயலாளருமான ஸ்ரீராஜ் நாயர், “நவராத்திரி காலத்தில் நடைபெறும் கர்ஃபா மற்றும் தண்டியா நடனங்களில் முஸ்லிம்கள் பங்கேற்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நவராத்திரி என்பது வெறும் பாடலும் நடனமும் மட்டுமே கொண்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சி அல்ல; அது அம்மனை வழிபடும் ஒரு வழிபாட்டு முறை. சிலை வழிபாட்டை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இந்தத் திருவிழாவில் ஏன் கலந்து கொள்ள வேண்டும்?” என்று பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் நிற்காமல், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் ஒரு கெடுபிடி வழிகாட்டுதலையும் வி.எச்.பி அமைப்பு வழங்கியுள்ளது. இதன்படி, கர்ஃபா மற்றும் தண்டியா நடனங்கள் நடைபெறும் நுழைவு வாயில்களில் அனைவரின் ஆதார் கார்டுகளையும் தீவிரமாகச் சோதிக்க வேண்டும் என்றும், வருகை தருபவர்களின் நெற்றியில் கட்டாயமாகத் திலகமிட்டு அவர்களின் இந்து அடையாளத்தை உறுதி செய்த பின்னரே அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  MPSC Paper Leaked: "காதலிக்காக வினாத்தாள் லீக்!" - பிரேக்கப் ஆனதால் காட்டி கொடுத்த காதலன்: தேர்வே ரத்து!

மறுபுறம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உலகளவில் சமூக ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மை குறித்துப் பேசி வரும் சூழலில், அதற்கு முற்றிலும் மாறான வகையில் வி.எச்.பி-யின் இந்த நடவடிக்கை அமைந்திருப்பதாகப் பல தரப்பினரும் சுட்டிக்காட்டுகின்றனர். பொதுமக்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் ஒரு பாரம்பரியக் கலை நிகழ்வை, மத அடையாளம் மற்றும் சோதனைகள் மூலம் பிளவுபடுத்தத் துடிக்கும் வி.எச்.பி-யின் இந்த முயற்சிக்குச் சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்புகளும் விவாதங்களும் கிளம்பியுள்ளன.