உங்க ஓட்டு தான் ‘பவர்’! தமிழகத் தேர்தலில் கிங் மேக்கராகும் தெலுங்கு பேசும் மக்கள்; திமுக – அதிமுக போடும் மெகா ஸ்கெட்ச்!

தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தல் களம், இதுவரை பார்த்திராத ஒரு மிகப்பெரிய சமூக மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 33.4% சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் தெலுங்கு பேசும் சமூகங்கள் (Telugu-origin voters), இந்த முறை வெறும் வாக்காளர்களாக மட்டும் இல்லாமல், ஆட்சியையே தீர்மானிக்கும் “பவர் புரோக்கர்களாக” உருவெடுத்துள்ளனர். 1.4 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்டுள்ள இச்சமூகத்தினரின் ஆதரவைப் பெற திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு அணிகளும் மல்லுக்கட்டி வருகின்றன.

சமீபத்தில் நடைபெற்ற ‘கம்மா குளோபல் பெடரேஷன்’ மாநாடு, தமிழக அரசியலில் ஒரு புதிய அதிர்வலையை ஏற்படுத்தியது. 30 சட்டமன்ற இடங்கள் மற்றும் ‘துணை முதல்வர்’ பதவி போன்ற இச்சமூகங்களின் கோரிக்கைகளைத் திராவிடக் கட்சிகள் இப்போது அலட்சியப்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதன் வெளிப்பாடாக, வேட்பாளர் பட்டியலில் திமுக அணி 17 தெலுங்கு பின்னணி கொண்ட வேட்பாளர்களையும், அதிமுக அணி 22 வேட்பாளர்களையும் களமிறக்கியுள்ளது. குறிப்பாக கம்மா நாயுடு (18 இடங்கள் இரு அணிகளும் சேர்த்து), பலிஜா நாயுடு (11 இடங்கள்) மற்றும் ரெட்டி சமூகத்தினர் (10 இடங்கள்) இந்தத் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "திமுக-வின் ₹8000 கூப்பன் திட்டம் ஒரு மோசடி; போலி கூப்பன்கள் ரெடி!" - கமலாலயத்தில் நாராயணன் திருப்பதி அதிரடிப் பேட்டி!

மண்டல ரீதியான பலப்பரிட்சை: வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற எல்லைப் பகுதிகளிலும், கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற தொழில் நகரங்களிலும் தெலுங்கு பேசும் மக்களின் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கின்றன. இதனை உணர்ந்த திமுக, தனது கூட்டணிக்குள் தேமுதிக-வை இணைத்துக் கொண்டதோடு, அமைச்சர் எ.வ. வேலு மற்றும் கே.என். நேரு போன்ற மூத்த தலைவர்களிடம் இப்பகுதிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை வழங்கியுள்ளது. மறுபுறம், அதிமுக தனது கோட்டையான கொங்கு மண்டலத்தில் 24 மனை தெலுங்கு செட்டியார் மற்றும் வேலம்மா நாயுடு சமூகங்களுக்கு முக்கியத்துவம் அளித்துத் தனது செல்வாக்கைத் தக்கவைக்க முயல்கிறது.

அரசியல் அதிகாரத்தில் புதிய அத்தியாயம்: “யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட, அதில் எங்களுக்கு என்ன பங்கு?” என்ற கேள்வியைத் தெலுங்கு பேசும் சமூகங்கள் இப்போது வெளிப்படையாகவே எழுப்பத் தொடங்கிவிட்டன. இசை வேளாளர் சமூகத்திற்கு திமுக 4 இடங்களை வழங்கியுள்ள நிலையில், அதிமுக தெலுங்கு செட்டியார் சமூகத்திற்கு 3 இடங்களை ஒதுக்கிப் பதிலடி கொடுத்துள்ளது. ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், இந்த மொழிசார்ந்த வாக்கு வங்கி எந்தப் பக்கம் சாய்கிறதோ, அவர்களுக்கே செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் சாவி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

Leave a Comment