கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்பதற்குத் தடை கோரி திமுக தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், திமுகவின் இந்தச் செயலைத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் கடுமையாகக் கிழித்துத் தொங்கவிட்டுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு அந்த மாநிலத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும், எல்லா இடங்களுக்கும் செல்வதற்கு நூறு சதவீதம் முழு உரிமை உள்ளது என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். முதலமைச்சர் விஜய் கரூருக்குப் போகிறார் என்ற செய்தி கூட முழுமையாக வராத நிலையில், திமுகவினர் ஏன் இவ்வளவு பதற்றமடைந்து நீதிமன்றத்திற்கு ஓடுகிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சர் விஜய் கரூர் சென்றால், அங்குள்ள பொதுமக்கள் திமுக ஆட்சியில் தங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்களையும், குறைகளையும் அவரிடம் நேரடியாகக் கொட்டிவிடுவார்கள் என்ற பயம் தான் திமுகவிற்கு வந்துள்ளதாகச் சாடினார். என்ன பிரச்சனை என்றே தெரியாமல், வழக்குகளைச் சரியாகப் படிக்காமல் உச்சநீதிமன்றம் வரை சென்று மனுத் தாக்கல் செய்த திமுகவின் லீகல் டீமை நீதிபதிகளே இன்று கண்டித்து அனுப்பியுள்ளனர். “முதலில் போய் வழக்குகளைப் படித்துவிட்டு வாருங்கள்” என்று கூறி திமுக வழக்கறிஞர்களை உச்சநீதிமன்றம் திருப்பி அனுப்பிய லட்சணத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும், தொடர்ந்து நீதிமன்றங்களின் பொன்னான நேரத்தை திமுகவினர் வீணடித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஐந்து ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு எதையும் செய்யாமல், கடந்த எழுபது ஆண்டுகளாகச் செய்த அனைத்துத் துரோகங்களுக்கும் தமிழக மக்கள் தற்பொழுது மொத்தமாக விடை கொடுத்துவிட்டனர் என்று சிடிஆர் நிர்மல் குமார் குறிப்பிட்டார். மேலும், இந்தத் தமிழக அரசு நடத்தக் கூடிய தேர்வுகள் மற்றும் தற்காலிக நியமனங்கள் அனைத்தும் நூறு சதவீதம் நேர்மையான முறையில் மட்டுமே தற்பொழுது நடைபெற்று வருவதாக அவர் தெளிவுபடுத்தினார். தகுதியின் அடிப்படையில் மட்டுமே அனைத்தும் நடப்பதால் தான், தற்போதைய நிர்வாகத்தில் இவ்வளவு வெளிப்படைத்தன்மை (Visibility) இருப்பதாக அவர் பெருமிதத்துடன் கூறினார்.
அடுத்த ஆறு மாத காலத்திற்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலமாகத் தற்காலிக நியமனங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதற்காக வரும் விண்ணப்பங்கள் அனைத்தும் முழுமையாகச் சரிபார்க்கப்பட்டு, அவர்களின் பின்னணி குறித்த ஆய்வுகள் (Background Check) தீவிரமாக நடத்தப்பட்ட பின்னரே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்றார். இவ்வளவு பெரிய அளவிலான விண்ணப்பங்களைச் சரிபார்த்து நேர்மையாகக் கொண்டு செல்வதால்தான் சில நாட்கள் கூடுதலாக எடுத்துக் கொள்கிறதே தவிர, இதில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை என்றும், எங்கேயாவது தவறு நடந்ததாகக் குறிப்பிட்டுக் காட்டினால் இந்த அரசு எவ்வித தயாதாட்சண்யமும் இன்றி நூறு சதவீதம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் சிடிஆர் நிர்மல் குமார் தனது பேட்டியில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.