திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் திமுகவில் இணைந்ததாக வெளிவந்த செய்திகளுக்கு தவெக மாவட்ட/பகுதி நிர்வாகி ஒருவர் மிகவும் காரசாரமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் புழுதிவாக்கம் பகுதியில், முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், பகுதி சேர்மன் ரவிச்சந்திரன் மற்றும் வட்டச்செயலாளர் ஜே.கே. மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில், தவெக பகுதி இணைச்செயலாளர் எனச் சொல்லி ஒருவர் திமுகவில் இணைந்ததாக நாளிதழ்கள் மற்றும் செய்திச் சேனல்களில் செய்திகள் வெளியாகின. இதற்குப் பதிலளித்துப் பேசிய தவெக நிர்வாகி, “இப்போதெல்லாம் பொழுது போகாததற்கு ஒரு வேலையாக முன்னாள் அமைச்சரும், பகுதி செயலாளரும் சேர்ந்து கொண்டு இல்லாத ஒரு விஷயத்தை உருவாக்கி, போலி ஆட்களைக் கட்சி மாற வைப்பது போல நாடகமாடி வருகிறார்கள். இந்த பொழப்புக்கு நீங்க வேற எதுனா பொழப்பு பண்ணலாம்” என மிகக் கடுமையாகச் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுகவில் இணைந்ததாகக் கூறப்படும் அந்த இளைஞர் 2014 முதல் விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்ததாகப் பேட்டி கொடுப்பதாகவும், ஆனால் தவெக உருவானதற்குப் பிறகு அவருக்குக் கட்சியில் எந்தவொரு பொறுப்பும் வழங்கப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தினார். “தேர்தலில் நான் ஜெயித்த பிறகு என்ன வாழ்த்த வந்த 20 பேரில் அவனும் ஒருவன், அவ்வளவுதான். அவனைப் போன்ற கட்சிக்குச் சம்பந்தமில்லாத, ரோட்டில் சுற்றும் நபர்களையெல்லாம் அழைத்து வந்து ‘வட்ட இணைச்செயலாளர்’ என்று பொய் சொல்லி மாலையும் சால்வையும் போட்டுத் தலைவரின் ‘குட் புக்’கில் இடம் பிடிக்கப் பார்க்கிறார்கள்” என்று சாடினார்.
மேலும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் சீட் பெற வேண்டும் என்பதற்காகவே ஜே.கே.மணிகண்டன் மற்றும் சேர்மன் ரவிச்சந்திரன் போன்ற திமுக நிர்வாகிகள் இத்தகைய பொய்யான நிகழ்வுகளைத் திட்டமிட்டு ஊடகங்களுக்குப் பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டினார். “எங்கள் கட்சியில் சேர வேண்டும் என நினைத்தால் ஆயிரக்கணக்கானோரை நாங்கள் ஒரே நாளில் சேர்க்க முடியும். சமீபத்தில் கூட அண்ணன் தியாகராஜ் மற்றும் தனசேகர் முன்னிலையில் 200-க்கும் மேற்பட்டோர் தவெக-வில் இணைந்தனர். ஆனால், நாங்கள் யாரையும் மீடியாவைக் கூப்பிட்டு பொய் பேசச் சொல்வதில்லை. வரவவர்களை அரவணைத்துச் செல்ல மட்டுமே எங்கள் தலைவர் திரு. ஜோசப் விஜய் எங்களுக்குக் கற்றுக்கொடுத்துள்ளார்” எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்ட அவர், செய்தியாளர்கள் எந்தவொரு நபர் கட்சி மாறினாலும் அவர்களிடம் முறையான அடையாள அட்டை உள்ளதா எனச் சரிபார்த்துவிட்டுச் செய்திகளை வெளியிட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொண்டார்.





