“நெதர்லாந்தை விட இந்தியாவில் இது சூப்பர்!” – மும்பை பிரசவ அனுபவத்தைப் பகிர்ந்து வைரலாகும் டச்சுப் பெண்!

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இவானா என்ற பெண், கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வருகிறார். சமீபத்தில் மும்பையில் தனது பெண் குழந்தையைப் பெற்றெடுத்த அவர், இந்தியாவில் தனது பிரசவம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு எவ்வாறு இருந்தது என்பது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது. “ஆமஸ்டர்டாமில் இருந்து இந்தியாவுக்கு” என்ற தலைப்பில் அவர் வெளியிட்டு வரும் தொடர் வீடியோக்களின் ஒரு பகுதியாக இந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் பிரசவ முறை என்பது மிகவும் இயல்பான, மருத்துவத் தலையீடுகள் மற்றும் வலி நிவாரணி மருந்துகள் குறைவான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அங்கு குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே தாய்மார்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்தியாவில் நிலைமை முற்றிலும் மாறுபட்டது என்று இவானா சுட்டிக்காட்டுகிறார். மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இயற்கை முறையில் பிரசவிக்கத் தாம் சில போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தாலும், குழந்தை பிறந்த பிறகு கிடைத்த பராமரிப்பு தமக்கு நெகிழ்ச்சியையும,் பேரானந்தத்தையும் அளித்ததாகக் கூறியுள்ளார்.

“எனது மகள் பிறந்த பிறகு, மருத்துவமனையில் கிடைத்த கவனிப்பு உண்மையிலேயே மிக அழகாக இருந்தது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை வசதியாகவும், அங்கு இருந்த செவிலியர்கள் என் குழந்தையைத் தங்களுடைய சொந்தக் குழந்தை போல் மிகவும் அன்போடு பார்த்துக்கொண்டார்கள். நெதர்லாந்தில் இந்த அளவுக்கு தனிப்பட்ட அக்கறையும் கவனிப்பும் கிடைப்பது அரிது” என்று இவானா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், பிரசவம் முடிந்து மருத்துவமனையில் இருந்து தனது சிறிய மும்பை வீட்டிற்குத் திரும்பிய போது, உண்மையான சவால்கள் தொடங்கின. சொந்த ஊர், பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருந்ததால், ஒரு புதிய தாயாக கடுமையான தனிமை உணர்வை அவர் எதிர்கொண்டார். இதற்கு மேலாக, மும்பையில் வீசிய கடுமையான கோடை வெப்ப அலை நிலைமையை மேலும் மோசமாக்கியது. 40 டிகிரி செல்சியஸைக் கடந்த வெப்பம் காரணமாக, குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறக்கூட அஞ்சியதாகக் கூறுகிறார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ₹2.5 கோடி அமெரிக்க வேலை வேணாம்.. பெத்தவங்களுக்காக மளிகைக் கடை வச்ச IIT கோல்ட் மெடலிஸ்ட்! உருக வைக்கும் வைரல் கதை!

மும்பையின் அதிவேகப் போக்குவரத்து, அஞ்ச வைக்கும் சாலை நெரிசல் மற்றும் புதிய நகரின் சூழல் ஆகியவை அவருக்கு கூடுதல் மன அழுத்தத்தைக் கொடுத்தன. “அருகில் உள்ள பூங்காவிற்கு நடைபயிற்சி செல்லக்கூட பயமாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் எனது செல்லப் பிராணியான ‘பாம்பி’ என்ற நாயுடன் வீட்டிலேயே முடங்க வேண்டியதாயிற்று” என அவர் தெரிவித்துள்ளார். இறுதியில், குழந்தைக்கு நான்கு மாதங்கள் நிறைவடைந்த போது, இந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், சற்று மூச்சு விடவும் தற்காலிகமாக நெதர்லாந்திற்குப் பறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இவானாவின் இந்த உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகி, ஆயிரக்கணக்கான நெட்டிசன்களின் கருத்துகளை ஈர்த்து வருகிறது. “ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகளில் குழந்தைகள் பிறக்கும் போது உறவினர்களின் ஆதரவோ அல்லது வீட்டு உதவிகளோ கிடைப்பது மிகவும் கடினம். ஆனால் இந்தியாவில் சமையல், வீட்டைப் பராமரித்தல், குழந்தையைக் கவனித்தல் போன்ற பணிகளுக்கு எளிதாக ஆட்கள் கிடைக்கிறார்கள். அத்துடன் மருத்துவர்களின் உடனடி ஆலோசனையும் இந்தியாவில் சாத்தியம். எனவே இந்தியாவில் பிரசவிப்பதே பல மடங்கு சிறந்தது” என்று பலரும் இவானாவின் பதிவிற்குப் பின்னூட்டம் அளித்து வருகின்றனர்.