தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நாள்தோறும் பல்வேறு சுவாரஸ்யமான விவாதங்களும் அரசியல் காரசாரமான பதிலடிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இன்றைய கூட்டத்தொடரின் போது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசிய பேச்சு அவையில் திடீர் சலசலப்பையும், சிரிப்பலையையும் ஏற்படுத்தியது.
சட்டப்பேரவையில் விவாதத்தின் போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “திருவள்ளூர் நமது சொந்த மாவட்டம். அங்கு நடைபெற்றத் தேர்தலில் 10-க்கு 10 தொகுதிகளிலும் நாமதான் வெற்றி பெற்றுள்ளோம்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அப்போது எதிர்த்தரப்பில் இருந்து சட்டெனக் குரல் எழுப்பிய உறுப்பினர்கள், “திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி தொகுதியில் அதிமுக அல்லவா வெற்றி பெற்றுள்ளது?” எனச் சுட்டிக்காட்டினர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குறுக்கீட்டைத் தொடர்ந்து உடனடியாகத் தனது பேச்சைத் திருத்திக் கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “ஆமாம், 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்” என்று சிரித்தபடியே கூறினார்.
அதோடு நிறுத்தாமல், திருத்தணி தொகுதி குறித்துத் தொடர்ந்து பேசிய அவர், “அதுவும் நம்ம தொகுதிதானே… அதிமுகவும் நாமும் ஒன்று தானே!” எனத் தற்செயலாகக் கூறிய கருத்து அவையில் பெரும் விவாதத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. அமைச்சரின் இந்த எதிர்பாராத பதிலைக் கேட்டு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே சில நொடிகள் ஆச்சரியமும் சிரிப்பலையும் தொற்றிக் கொண்டது.





